சென்னை: முதல் திருநங்கையாய் கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றதற்காக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியது குறித்து திருநங்கை நேகா நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மலையாளப்படமான அந்தரம் படத்தில் நடித்ததற்காக திருநங்கை பிரிவில் சிறந்த நடிகை என விருது பெற்றுள்ளார் திருநங்கை நேகா.
18 வயதில் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறிய நேகா கடின உழைப்பால் முதலமைச்சர் பாராட்டும் அளவு உயர்ந்துள்ளார்.
மலையாள படத்தில் நடித்ததால் மாநில அரசின் விருது பெற்ற திருநங்கை நேகா
திருநங்கை நேகா, மலையாள படமான அந்தரம் படத்தில் நடித்தார். இந்தப்படம் திருநங்கைகள் சமூகத்தில் சந்திக்கும் சவாலான விஷயங்களை வெளிப்படையாக பேசியது. அந்தரம் படத்தின் இயக்குநர், புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட தயாரிப்பாளருமான பி அபிஜித், LGBTQIA+ நபர்களுடன் பணிபுரிந்து வருபவர். தனது நண்பர் மூலம் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் நேகா பற்றி அறிந்த அவர் நேகாவை தொடர்புக்கொண்டார். இது ஒரு பெரிய ரோல் என்னால் செய்ய முடியாது என்று நேகா சொல்ல செய்யமுடியும் என நடிக்க வைத்துள்ளார். அதன் பின்னர் இந்தப்படத்தில் நடித்ததற்காக நேகாவிற்கு விருது அறிவித்தது கேரள அரசு. இந்தியாவிலேயே திரைப்படத்துறையில் விருதுபெறும் முதல் திருநங்கை இவராகத்தான் இருப்பார்.
18 வயதில் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நேகா..உதவிய திருநங்கைகள்
தான் விருது பெற்றதை தனது குடும்பத்தினருக்கு சொல்ல தன் தாயாருக்கு போன் செய்தபோது அப்படியா சரி எனக்கு வேலை இருக்கு போனை வை என்று சொல்லி இருக்கிறார். 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளான நேகா அதன் பின்னர் இன்றுவரை வீடுதிரும்ப முடியவில்லை. தனது தந்தையின் மரணத்திற்கு கூட தன்னை அனுமதிக்கவில்லை, தனது தாய் இத்தனை வருடங்களில் ஒரே ஒருமுறைதான் தன்னை பார்த்துள்ளார் என திருநங்கை நேகா வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். தனக்கு விருது கிடைத்ததில் சக திருநங்கைகள் ஆனந்த கண்ணீர் வடித்ததை பார்த்தேன், அவர்கள் தான் தனது தாயார் மற்றும் உண்மையான சொந்தங்கள் என்று தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் திருநங்கை நேகாவிற்கு அந்தரம் படத்தில் நடித்ததற்காக மாநில விருது கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில் “கேரள மாநில அரசின் 52வது திரைப்பட விருதில் தமிழகத்தைச் சேர்ந்த நேகா அவர்கள் அந்தரம் படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கேரள திருநங்கைக்கான சிறந்த பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
திருநங்கைகள் முன்னேற வேண்டும்- முதல்வர்
அரசியல், கலை ஆகிய துறைகளில் திருநங்கைகள் தங்களுக்குரிய இடத்தைப் பெற வேண்டும் என கருதுபவன் என்கிற வகையிலும் தமிழக முதல்வர் என்கிற வகையிலும் நேகா அவர்களின் இந்த வெற்றி எனக்கு பெருமையளிக்கிறது. குடும்பத்தின் புறக்கணிப்பால் இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, தனது கடும் உழைப்பினாலும், தேடலினாலும் சாதித்துள்ள நேகா மேலும் பலருக்கு எடுத்துக்காட்டாகவும், ஊக்கமாகவும் திகழ வாழ்த்துகிறேன், திரைப்படத்துறையில் திருநங்கையரும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்து அத்துறையிலும் சமூக நீதி நிலைநிறுத்தப்பட விழைகிறேன்” என வாழ்த்தியுள்ளார்.
முதல்வரின் வாழ்த்து நெகிழ்ந்துப்போன நேகா
முதல்வரின் வாழ்த்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நேகா முதல்வரின் வாழ்த்துக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். “வாழ்த்து செய்திகளை படித்தவுடன் இதயம் ஒருமுறை துடிப்பதை நிறுத்தி மீண்டும் துடித்தது, நன்றி தமிழக முதல்வர் அவர்களே” என பதிவிட்டுள்ளார். சமூகத்தில் மிகவும் இழிவாக நடத்தப்படும் திருநங்கை சமுதாயத்திலிருந்து பல துறைகளில் சாதிக்க வந்துவிட்ட பலரையும் கைதூக்கி விட வேண்டியது ஒவ்வொருவர் கடமை. அதில் மாநில முதல்வர் முதல் நபராக இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.