சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் சாதிய வன்கொடுமை புகாருக்கு உள்ளான 5 பேரை, 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து, திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஞ்சாங்குளத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரின் பெட்டிக்கடைக்கு கடந்த வாரம் குழந்தைகள் சிலர் மிட்டாய் வாங்க வந்தனர். ஆனால், ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்தக் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த கடைக்காரர் மகேஸ்வரன், அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தியதில், சாதி பிரச்சினை காரணமாக இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 பேர் மீது போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர்.
கடைக்காரர் மகேஸ்வரன், ராமச்சந்திரன் என்ற மூர்த்தி, குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள முருகன், சுதா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின்படி, மகேஸ்வரனின் கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை குறிப்பிட்ட காலம் வரை ஊருக்குள் நுழைய தடை விதிக்கும் சட்டப்பிரிவு பயன்படுத்தப்படும் என தென்மண்டல ஐஜி அஷ்ரா கார்க் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான மனுவை திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பத்மநாபன், பாஞ்சாங்குளம் கிராமத்தில் சாதிய வன்கொடுமை புகாருக்கு உள்ளான 5 பேரையும், 6 மாதம் ஊருக்குள் நுழையத் தடை விதித்து உத்தரவிட்டார்.