நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குத் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.
இந்தச் சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செய்தி முகமைகள் கூறுகின்றன.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, அசாம், உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தப்படுவது தெரிய வந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
சென்னையில் 12 என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
சென்னை புரசைவாக்கத்தில் இருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தமிழ்நாடு தலைமை அலுவலகத்தில் காலை 3.30 மணி முதல் 8.45 மணி வரை சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
- போதைப்பொருள் கூடாரம் ஆகிறதா பெங்களூரு? எளிதில் இலக்காகும் இளைஞர்கள்
- மியான்மரில் இருந்து தப்பித்த இந்தியர்கள் தாய்லாந்து முகாமில் அடைப்பு – 13 தமிழர்கள் கதி என்ன?
- மன்னார் வளைகுடா: கடல் நீர் பச்சை நிறமாக மாறியது எப்படி?
“12 அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். அலுவலகத்தில் இருந்து ஹார்ட் டிஸ்க், சஞ்சிகைகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர்” என அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் 3 மணி நேரம் சோதனை
திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் 3 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் பேகம்பூர் முகமதியாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான 3 வதுமாடி கட்டிடத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி செயல்பட்டு வருகிறது இந்த கட்சி அலுவலகத்தில் இன்று 22.09.22 அதிகாலை 3:30 மணி அளவில் NIA அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் கட்சி அலுவலகம் உள்ள முகமதிய புரத்தில் சாலையின் இரு பக்கமும் தடுப்புகளை ஏற்படுத்தி துப்பாக்கி ஏந்திய அதிவேக அதிரடிபடை மற்றும் திண்டுக்கல் காவல்துறையினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தடுப்புகளை மீறி கட்சி அலுவலகம் செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்பொழுது என்.ஐ.ஏ.வுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மூன்று மணி நேரம் சோதனை முடிந்து என்ஐஏ அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கி வந்த போது பதற்றமான சூழ்நிலை நிலவியது.சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் தெரியவந்திருக்கிறது.
ராமநாதபுரம் வாலிநோக்கத்தில் சோதனை
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள வாலிநோக்கம் கிராமத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் பரக்கத்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து சுமார் 7 மணி வரை முன்று மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
பின்னர் எஸ்டிபிஐ கட்சி மேற்கு மாவட்டத் தலைவர் பரக்கத்துல்லாவை விசாரணைக்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை அழைத்து சென்றனர்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பரகத்துல்லாவை அழைத்துச் சென்ற பிறகு வாலிநோக்கம் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்ய சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வாகனங்கள் செல்ல முற்பட்டனர்; அவர்களை காவலர்கள் தடுத்தி நிறுத்தினர்.
கோவையில் போராட்டம்
கோவை கரும்புக்கடை பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய செயற் குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவரது வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
காலை 5.30 மணி முதல் இஸ்மாயில் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஏற்கெனவே கோவை உக்கடம் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்தில் கடந்த 13 -ஆம் தேதி வருமான வரித்துறை, அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.
சோதனை முடிவில் அதிகாரிகள் இஸ்மாயிலை விசாரணைக்காக தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து ஒப்பனக்கார வீதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் வீடுகளில் அதிகாலை 4 மணி முதல் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை மேற்கொண்டனர். கோரிப்பாளையம், நெல்பேட்டை சுங்க பள்ளி வாசல், வில்லாபுரம், யாகப்பா நகர் ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்றது.
அமித்ஷா ஆலோசனை
நாட்டின் பல பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறை செயலர், தேசிய புலனாய்வு அமைப்பின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிஃஎப்ஐ என்பது என்ன?
கேரளாவில் இயங்கி வந்த தேசிய வளர்ச்சி முன்னணி(என்.டி.எஃப்), தமிழ்நாட்டின் மனித நீதிப் பாசறை, கர்நாடகாவைச் சேர்ந்த ஃபோரம் ஃபார் டிக்னிட்டி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 2007-ஆம் ஆண்டுபாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவாக்கப்பட்டது.
வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு குற்றங்களில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு பேராசிரியரை தலையை அறுத்து படுகொலை செய்தது, தமிழ்நாட்டில் ராமலிங்கம் படுகொலை உள்ளிட்டவை இந்த அமைப்பின் மீது கூறப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள்.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு பணம் வரும் வழிகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
https://www.youtube.com/watch?v=OhNd9LXhfjw&t=3s
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்