புதுச்சேரி: “புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், புதுச்சேரியில் புற்றுநோயாளிகள் சிகிச்சை மையத்தை உருவாக்க வேண்டும், அதற்கு மத்திய அரசு நிதியுதவி தருவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளேன்” என்று மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
இது குறித்து புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரியில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களும், முதியோரும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. ஜிப்மரில் கீமோ தெரபி, ரேடியோ தெரபிக்கு பல மாதங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பல சமயங்களில் 6 மாதங்கள் வரை நோயாளிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த காலத்தில் பல நோயாளிகள் இறந்து விடுகின்றனர்.
இதனால் புதுச்சேரி அரசு புற்றுநோயாளிகள் சிகிச்சை மையத்தை உருவாக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். புற்றுநோயை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை புதுச்சேரியில் பெண்களுக்கு செலுத்த வேண்டும். ஜிப்மரில் பொது நிர்வாகக்குழு கூட்டம் 18ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டத்தை தள்ளி வைத்துள்ளனர். குழுவின் உறுப்பினர் என்ற முறையில் நான் பங்கேற்று குறைபாடுகள் குறித்து பேச உள்ளேன்.
சமீபத்தில் நான் ஜிப்மர் இயக்குனரிடம் பேசினேன். அப்போது மருந்துகளை கொள்முதல் செய்வதாகவும், காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதி தந்துள்ளார். கையிருப்பில் உள்ள மருந்துகளைத் தவிர்த்து ஜிப்மரில் டாக்டர்கள் எழுதி தரும் மருந்துகள் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் வகையில் இருக்கவும் வலியுறுத்தியுள்ளேன். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு அட்டை வைத்துள்ள புதுச்சேரியைச் சேர்ந்தோருக்கு சரியான சிகிச்சை ஜிப்மரில் தராதது தொடர்பாக விசாரித்தேன்.
அப்போது கடந்த ஜூன் மாதத்துக்கு முன்பு வரை இருந்த தனியார் காப்பீட்டு நிறுவனம் பாக்கியை செலுத்தாததால் ஜிப்மர் மட்டுமில்லாமல் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜூனுக்கு பிறகு அரசே காப்பீடு திட்டத்தை ஏற்றுள்ளது. தனியார் காப்பீடு நிறுவனத்தினால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.