சிவகங்கையில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்ட நிகழ்வில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா மதுரை வருகை புரிந்துள்ளார். அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் களநிலவரம் அப்படியில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் சுற்றுச் சுவருக்காக கம்பி வேலிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய ஒற்றை செங்கல்லை தவிர வேறெந்தப் பணிகளும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று சமீபத்தில் கூட செய்திகள் வெளியாகின.
ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவில்லை. அதற்கு முன்பாக உயர்த்தப்பட்ட தொகைக்கான அனுமதியே மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. கடந்த ஜூன் மாதம் மதுரை மக்களவை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில், ”அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் மதுரையின் கலைஞர் நினைவு நூலகம். அடிக்கல் நாட்டி 40 மாதங்களை கடந்தும் ஒற்றைச் செங்கலோடு நிற்கும் மதுரை எய்ம்ஸ்.
இரண்டும் மதுரையின் சாட்சிகள்” என்று பதிவிட்டிருந்தார். அதன்பிறகு கூட எந்தவிதப் பணிகளும் தொடங்கியதாக தகவல்கள் இல்லை. இத்தகைய சூழலில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா எந்த விஷயத்தை கூறினார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஒருவேளை அமைச்சருக்கு சரியான தகவல் சென்றடையவில்லையா? இல்லையெனில் வேறு ஏதாவது ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை பற்றி பேசுகிறாரா?
கட்டுமானப் பணிகளுக்கு முன்பு நடைபெறக் கூடிய கோப்புகள் தொடர்பான பணிகளை குறிப்பிடுகிறாரா? எனப் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் தொடர்பாக குழப்பமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வைகோ ஆவணப்படம் தயாரிக்க காரணம்? – துரை வைகோ பதில்!
இந்த விஷயம் தொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், 10 நாட்களுக்கு முன்பு கூட துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் பேசினேன். அதற்கு அவர்கள், ஜப்பான் நாட்டு நிறுவனம் போதிய நிதியுடன் தயாராக இருக்கிறது. ஆனால் உயர்த்தப்பட்ட தொகையை விடுவிப்பதில் மத்திய அரசு தான் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.