திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, சூத்திரர்கள் என்பவர்கள் யார், மனுஸ்மிருதி அவர்களை எவ்வாறு இழிவுபடுத்துகிறது என்பதை செப்டம்பர் 6ஆம் தேதி திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசினார். பாஜக மற்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் ஆ.ராசாவின் பேச்சை சர்ச்சையாக்கினர்.
இந்துக்களை ஆ.ராசா இழிவுபடுத்திவிட்டார் என்று சமூகவலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதிமுகவும் இந்த பிரச்சாரத்தில் இணைந்து கொண்டது. ஆ.ராசாவுக்கு எதிராக கடையடைப்பு போராட்டமும் பாஜகவால் நடத்தப்பட்டது. ராசாவுக்கு எதிராக காவல்துறையில் புகாரும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்துக்களை இழிவுபடுத்திவிட்டார் என்று திரித்து கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலையோ மேலும் ஒரு படி போய் தமிழகத் தாய்மார்களை அவமதித்துவிட்டார் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜகவினர் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த உள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது. தமிழ் இனத்தை, தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தி கேவலப்படுத்தும், ஆ ராசா போன்ற ஆளும் கட்சி நபர்களை எல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பொய் வழக்கில் கைது செய்து அச்சுறுத்துகிறார்கள். சில திமுக வழக்கறிஞர்கள் நீதிபதிகளையே அச்சுறுத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி வடக்கு, விருதுநகர் மேற்கு, கள்ளக்குறிச்சி, வேலூர், ஈரோடு வடக்கு, கோயம்புத்தூர் நகர், கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், நீலகிரி சென்னை என்று தொடங்கிய கைது நடவடிக்கை பரவலாக தமிழகம் முழுவதும் தற்போது தொடர்ந்து நடைபெறுகிறது இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள்.
திமுகவின் அராஜகமும் ஆளும் கட்சி என்பதால் நடத்தும் அத்துமீறலும், கண்டிக்கத்தக்கது. மிக விரைவில் இந்த போலி வழக்கும் கைது நடவடிக்கையும் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. திமுக பேசினால், கண்களை மூடிக்கொண்டு, அந்த அவலத்தை கண்டுகொள்ளாத காவல்துறை…..மறுப்பு தெரிவிக்கும் மக்களை எல்லாம் கைது செய்வது காவல் துறையின் ஓரவஞ்சனையான நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.
திமுகவின் பொய் வழக்கைக் கண்டும், கைது நடவடிக்கையைக் கண்டும் எந்த பாஜக தொண்டனும் அஞ்சப்போவதில்லை. சிறையை கண்டு அச்சப்பட்டு பின்வாங்கும் அலறித் துடிக்கும், சின்ன செயல் எல்லாம் பாஜகவினர் செய்ய மாட்டார்கள். தவறை யார் செய்தாலும் தட்டிக் கேட்க பாஜக தயங்காது.
புதிய வேகத்துடன் புதிய எழுச்சியுடன் கோவை மாவட்டத்தில், தாய்குலத்தை பழித்த, தமிழ் சகோதரிகளை பிறப்பு சொல்லி இழிவு செய்த, ஆ.ராசாவின் அவலத்திற்கு நீதி கேட்டு அறவழியில் போராட்டத்தை, நடத்துவோம். தன்மானம் மிக்க தமிழ் சகோதரிகளே கோவையை நோக்கி திரண்டு வாருங்கள், தாய்மார்களே திரண்டு வாருங்கள். மாபெரும் அறவழிப் போராட்டத்தை வரும் 26ஆம் தேதி நடத்துவோம். மக்கள் ஆளும் கட்சியின் அநீதிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.