இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக கண்டனம் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இந்தியா முழுவதும் சுமார் 12 மாநிலங்களில் 106க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய கைது கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை குறி வைத்து அமலாக்கத்துறை சிபிஐ போன்றவற்றின் மூலம் மத்திய பாஜக அரசு நாடெங்கிலும் அத்துமீறி சோதனைகளையும் கைது நடவடிக்கைகளை பாய்ச்சி, அவற்றை ஒடுக்க நினைப்பது ஜனநாயக படுகொலையாகும்.
ஜனநாயக பாதையில் இயங்கும் மக்கள் ஆதரவு இயக்கங்களான எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் பிரிண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றின் மதவாதத்துக்கு எதிரான தொடர் செயல்பாடுகளையும் கருத்து பரப்புகளையும் தாங்க முடியாததை, அதிகார பலம் கொண்டு அந்த இயக்கங்கள் மீது ஏவப்படும் மிக மோசமான அடக்குமுறைகளும் எதேசதிகாரப்போக்குகளும் அப்பட்டமான பழிவாங்கும் போக்கே ஆகும்.
மதவாத அரசியலையும் பாசிசப் போக்கையும் கட்டவிழ்த்து விட்டு நாட்டை மதத்தால் துண்டாக்க நினைக்கும் மத்திய பாஜக அரசின் அநீதி செயல்பாடுகளுக்கு எதிராக இருப்பதனாலயே எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகிய இயக்கங்களின் தலைவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது இடங்களில் சோதனைகள் நிறுத்தப்படுவதுமான சதி செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன” இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் தீவிரவாத இயக்கங்களில் ஆள்சேர்ப்பு மற்றும் மக்களை திரட்டுவது என தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக தகுந்த ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.