வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: ‘சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு நல்ல மரியாதை உள்ளது. அவருடைய பேச்சைக் கேட்டு உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும்’ என பிரிட்டன் கூறியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளது. இந்நிலையில் மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் நடந்த எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, ‘இந்த யுகம் போருக்கானது அல்ல’ என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஐ.நா., பொது சபை கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் பேசிய ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட பல தலைவர்கள் பிரதமர் மோடியின் பேச்சை வரவேற்று உள்ளனர்.
இது குறித்து பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி கூறியுள்ளதாவது: சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு பெரும் மரியாதை உள்ளது. பிரதமர் மோடி மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் பெரும் மரியாதை, நட்பு உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால், மோடியின் பேச்சைக் கேட்டு, உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்று உள்ள நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று முன்தினம் ஜேம்ஸ் கிளெவர்லி சந்தித்து பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement