மாஸ்கோ: “ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களை நாங்கள் ஏற்றுமதி செய்யவில்லை” என்று வடகொரியா விளக்கமளித்துள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், ரஷ்யாவையும், அதன் எல்லைகள் மற்றும் மக்களையும் பாதுகாக்க, அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். புதினின் இப்பேச்சு சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் வடகொரியாவிடமிருந்து ரஷ்யா வாங்கியுள்ளதாக அமெரிக்கா கடந்த சில நாட்களாக கூறி வந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யாவும், வடகொரியாவும் மறுத்து வந்தன.
இதுகுறித்து வடகொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தரப்பில், “நாங்கள் இதற்கு முன்னரோ, அல்லது இப்போதோ ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களையோ, வெடி மருந்துகளையோ ஏற்றுமதி செய்யவில்லை. அணு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான திட்டமும் எங்களிடம் இல்லை. அமெரிக்கா வதந்திகளைப் பரப்புகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
பின்னணி: ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைய விரும்பியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவி, தாக்குதலைத் தொடங்கியது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் ரஷ்ய-உக்ரைன் போரால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போர் காரணமாக உலகின் பல பகுதிகளில் பணவீக்கம் ஏற்பட்டு, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளை மீட்க, அந்நாட்டு ராணுவத்துக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி, உதவி வருகின்றன.