`ராகுல் போட்டியிடமாட்டார்' – அப்படியென்றால் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பவர் `டம்மி' தலைவர்தானா?!

கேரளாவில், `பாரத் ஜோடோ யாத்திரை’ மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, நாளை (செப். 23) ஒரு நாள் பிரேக் எடுத்துக்கொண்டு டெல்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் பதவி உட்பட உட்கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், ராகுலின் டெல்லி பயணம் கவனம் பெற்றிருக்கிறது. அவர் டெல்லி சென்றாலும், தலைவர் பதவிக்குப் போட்டியிடமாட்டார் என்று மறைமுகமாகக் காங்கிரஸ் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. `ராகுல் காந்தியைத் தவிர வேறொருவர் கட்சியின் தலைவராக்கப்பட்டால், அவர் `டம்மி’ தலைவராகவே செயல்படுவார்’ என்ற கருத்துகளும் உலவத் தொடங்கியிருக்கின்றன.

`ராகுல் காந்தி போட்டியிடமாட்டார்!’

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்று சோனியா காந்தியைச் சந்தித்தார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர். சோனியாவிடம், தான் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக சசி தரூர் விருப்பம் தெரிவிக்க, `தாராளமாகப் போட்டியிடுங்கள்’ என்று சோனியா சம்மதம் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் டெல்லிக்குச் சென்று சோனியாவைச் சந்தித்திருக்கிறார். ஆகவே, தலைவர் தேர்தலில் கெலாட்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியா – ராகுல்

டெல்லி புறப்படுவதற்கு முன்பாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்த அசோக் கெலாட், `ஒருவேளை நான் காங்கிரஸ் கட்சியின் தலைவரானால், சிறிது காலம் ராஜஸ்தானின் முதல்வர் பதவியில் நீடிக்க வாய்ப்பளிக்குமாறு தலைமையிடம் கேட்கவிருக்கிறேன். தலைவரான பின்பு டெல்லி சென்றுவிட்டாலும், ராஜஸ்தான் அரசியலையும் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்’ என்று தெரிவித்ததாகத் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இந்த நிலையில், ராகுல் டெல்லி வருகை குறித்துப் பேசியிருக்கும் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “வெளிநாடு சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு திரும்பியிருக்கும் தனது அம்மாவைச் சந்திக்கவே டெல்லி வருகிறார் ராகுல். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக அல்ல. செப்டம்பர் 23-ம் தேதி இரவே அவர் கேரளாவுக்குத் திரும்பிவிடுவார். வேட்புமனுவை டெல்லிக்கு வந்து நேரடியாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். ஜூம் மூலம் தாக்கல் செய்ய முடியாது. செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரை (செப். 30-ம் தேதியோடு வேட்புமனுத் தாக்கல் முடிவடைகிறது) ராகுல் டெல்லிக்கு வரமாட்டார்” என்று கூறியிருக்கிறார். இதன்படி, `ராகுல் காந்தி தலைவர் தேர்தலில் போட்டியிடமாட்டார்’ என்பதைத்தான் ஜெய்ராம் ரமேஷ் மறைமுகமாகக் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

ஜெய்ராம் ரமேஷ்

`டம்மி’ தலைவர்!

இந்த நிலையில், `காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுலைத் தவிர வேறு யார் வந்தாலும், அவர் `டம்மி’ தலைவராகவே இருப்பார்’ என்று பா.ஜ.க-வினர் கிண்டல் செய்துவருகின்றனர். பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளரான ஷேசாத் பூனாவாலா (Shehzad Poonawalla), “காங்கிரஸ் என்ற குடும்ப நிறுவனத்தின் ஓனர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே ஒருவர் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியுமா?” என்று கேள்வியெழுப்பியவர், “எப்போதும் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடு காந்தி குடும்பத்தினரிடமே இருக்கும். யார் தலைவராக்கப்பட்டாலும் அவர்கள் `டம்மி’ தலைவராகவே இருப்பார்” என்றும் கூறியிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், “அசோக் கெலாட் நேரு குடும்பத்தின் தீவிரமான விசுவாசி. இந்திரா காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியில் பயணித்துக்கொண்டிருக்கிறார். ராகுலும், சோனியாவும் கெலாட்டை தலைவராக்க நினைப்பதாகவே தெரிகிறது. அப்போதுதான் கட்சி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என ராகுலும் சோனியாவும் நினைத்திருக்கலாம். எனவே கெலாட் தலைவராக்கப்பட்டால், நிச்சயம் கட்சியின் கட்டுப்பாடு ராகுலிடமே இருக்கும். கடைசி நேரத்தில், கெலாட் பின்வாங்கினால், முகுல் வாஸ்னிக்கை முன்னிறுத்தச் சோனியாவும், ராகுலும் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அதிருப்தி குழுவான ஜி-23-ல் இருக்கும் சசி தரூருக்கு பெரும் ஆதரவு இல்லை என்பதால், ராகுல், சோனியா ஆதரவு பெற்றவரே தலைவர் தேர்தலில் வெற்றிபெறுவார் எனத் தெரிகிறது. அப்படி வெற்றிபெறுபவர் நிச்சயம் `டம்மி’ தலைவராக இருக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.