சென்னை: கட்டுமானத்திலும் கட்டமைப்பிலும் சிறப்பான முறையில் தனித்துவத்துடன் செயலாற்றி வரும் பொறியாளர்களை கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் விருதுகளை வழங்கவுள்ளது.
கட்டுமானங்களிலும் கட்டமைப்புகளிலும் சிறந்து விளங்கும் பொறியாளர்களைக் கவுரவிக்கும் வகையில் சிறந்த பொறியாளர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு ‘கட்டிடக்கலை நுட்ப விருதுகள்’ மற்றும் ‘கட்டமைப்பு கலை நுட்ப விருதுகளை’ வழங்கும் அறிவிப்பு கடந்தவாரம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியானது. ஒரு வாரத்துக்குள் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து உள்ளனர்.
5 பிரிவுகளில் விருது
கீழே குறிப்பிட்டுள்ள 5 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன. கிராமப்புற வீட்டுக் கட்டுமானம், நகர்ப்புற குடியிருப்புக் கட்டுமானம், பொதுச் சேவை கட்டமைப்புகள் (பாலம், சாலை, மெட்ரோ ரயில் நிலையம், மருத்துவமனை), பொதுப் பயன்பாடு கட்டமைப்புகள் (பூங்கா, விளையாட்டு அரங்கம்), தொழிற்சாலைக் கட்டமைப்பு.
மேலும், மாற்றுக் கட்டுமான பொருட்களைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம் (சூரிய ஆற்றலைப் பயன்படுத்துதல்), புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், குறைவான கட்டுமான செலவு, மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த கட்டுமானம், பேரிடரைத் தாங்கும் திறன் ஆகியன விருதுக்கான சிறப்பு அம்சங்களாகக் கருதப்படும்.
இவ்விருது நிறுவனத்துக்கானதல்ல. குறிப்பிட்ட திட்டத்துக்குத் தலைமை வகித்த தனிநபருக்கானது. விருதுக்குத் தன்னைத் தகுதியானவர் என்று கருதும் நபரோ அல்லது அவரை அறிந்தவர்களோ அல்லது அவர் சார்ந்திருக்கும் நிறுவனங்களோ கூட பரிந்துரை செய்யலாம்.
விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர் கட்டிய கட்டுமானங்களும் கட்டமைப்புகளும் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டவைகளாக இருக்க வேண்டும்.
தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் பொறியாளர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுக்குத் தகுதியானவர்களை பரிந்துரை செய்யும்போது, எந்தப் பிரிவுக்கான பரிந்துரை என்பதோடு, அதற்கான சான்றாதாரங்களையும் உடன் இணைத்து https://www.htamil.org/01045 என்ற லிங்க்கில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தில் கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, செப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும் ஓரிரு நாட்களே உள்ளதால், விரைந்து விண்ணப்பிக்கவும். இந்த விருது நிகழ்வை ரினாகான் ஏ.ஏ.சி ப்ளாக்ஸ் இணைந்து வழங்குகிறது.