வங்கிகளில் சுமார் 23ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் குஜராத்தைச் சேர்ந்த பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கப்பல் கட்டும் நிறுவனம் ஏ. பி.ஜி. ஷிப் யார்டு. இதன் தலைவராக இருக்கும் ரிஷி கமலேஷ் அகர்வால், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. உள்ளிட்ட 28 வங்கிகளில் 22ஆயிரத்து 842 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. 2012 முதல் 2017 காலக்கட்டத்தில் ரிஷி கமலேஷ் அகர்வாலும் அவரது கூட்டாளிகளும் குற்றச்சதி, மோசடி, அரசு பதவிகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் வங்கிக்கடனை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக பெற்றுக்கொண்டு, பிற வழிகளில் செலவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ, ரிஷி கமலேஷை நேற்று கைது செய்தது. இவரது வங்கிக்கடன் 2016 ஜூலை மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடையே வராக்கடனாக அறிவிக்கப்பட்டது. வங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மொகுல் சோக்ஷி போன்றோரின் வரிசையில் ரிஷி கமலேஷ் அகர்வாலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Ytq7ZCjMp34″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM