வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ :உக்ரைன் மீதான போர் துவங்கி, ஏழு மாதங்கள் எட்டியுள்ள நிலையில், தன் ராணுவத்துக்கு, மூன்று லட்சம் வீரர்களை திரட்டுகிறது ரஷ்யா. இந்நிலையில், நேற்று ‘டிவி’ வாயிலாக, நாட்டு மக்களிடையே பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்., 25ல் போர் தொடுத்தது. தற்போது, போர் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையிலும், அது நீடித்து வருகிறது. இதற்கிடையே ரஷ்யப் படைகளுக்கு எதிராக, உக்ரைன் ராணுவம் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களை, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளது. டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய நான்கு பிராந்தியங்களை, தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளது.இதற்காக, இந்தப் பிராந்தியங்களில் மக்களின் கருத்துகளை கேட்பதற்காக, நாளை ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.ரஷ்யாவின் இந்த முயற்சிக்கு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும், ஐ.நா., பொது சபை கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘டிவி’ வாயிலாக நாட்டு மக்களிடையே நேற்று ஆற்றிய உரையில், விளாடிமிர் புடின் கூறியதாவது:நம் நாட்டின் எல்லை, இறையாண்மையை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம். இதற்காக, மூன்று லட்சம் ராணுவ வீரர்கள் இருப்பில் வைக்கப்படுவர். இதில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.ரஷ்யா மீது அணு ஆயுதங்களை ஏவுவதற்கு கூட தயாராக இருப்பதாக, ‘நேட்டோ’ எனப்படும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் பேசியுள்ளனர். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நேட்டோ நாடுகளை விட, எங்களிடம் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளன.எங்கள் நாட்டை, மக்களை பாதுகாப்பதற்காக, எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக உள்ளோம். நான் பொய் சொல்லவில்லை. பொறுப்பில்லாமல் பேசுவதை, மேற்கத்திய நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement