புதுச்சேரி யூனியன் திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆனந்தராஜ் (29). பெயின்டராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்த இவர், கடந்தாண்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் வேலை செய்தார். அங்கு லேப் டெக்னீசியனுக்கு படித்து வந்த சீர்காழியை சேர்ந்த சந்தியா என்பவரை காதலித்து, கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
அப்போது, ஆனந்தராஜின் தாய் மற்றும் அவரது மூன்று சகோதரிகளும், வரதட்சணையாக 20 சவரன் நகை, கார் மற்றும் சீர் வரிசை கேட்டனர். அதற்கு, சந்தியாவின் பெற்றோர் மறுத்து விட்டனர். ஆனந்தராஜ், தனக்கு வரதட்சணை வேண்டாம் எனக் கூறி, தாய் மற்றும் சகோரிகளின் எதிர்ப்பை மீறி சந்தியாவை திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு சந்தியாவை அவரது மாமியார் அன்னக்கிளி (70), மைத்துனிகள் நிர்மலா, கலா, பிரியா ஆகியோர் ஆனந்தராஜ் இல்லாத நேரங்களில் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தனர். இதுகுறித்து சந்தியா கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அதனைத் தொடர்ந்து ஆனந்தராஜ், தனது மனைவியுடன் அரியூரில் வாடகை வீட்டிற்கு தனிக்குடித்தனம் சென்றார்.
ஆனந்தராஜின் சகோதரிகள் போன் செய்து, அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. நீ வாடகை வீட்டில் இருக்க வேண்டாம் எனக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அன்னக்கிளி மற்றும் அவரது மூன்று மகள்களும், வரதட்சணை கேட்டு மீண்டும், 5 மாத கர்ப்பிணியான சந்தியாவை துன்புறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம், சந்தியாவை கர்ப்பத்தை கலைக்குமாறும், தங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி தாக்கி உள்ளனர். இதனால் மனமுடைந்த சந்தியா நேற்று காலை 7.30 மணியளவில் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாமியார் அன்னக்கிளியும் வீட்டிலேயே துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்றிருந்த ஆனந்தராஜ், காலை 9 மணிக்கு வீட்டிற்கு வந்த போது தனது மனைவி மற்றும் தாய் துாக்கில் இறந்த கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரும் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் மருத்துவக் கல்லுாரி மருத் துவனையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருபுவனை போலீசார், சந்தியா மற்றும் அன்னக்கிளி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.