சுகாதாரத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் அபிவிருத்தி அமைப்பு Americares, 7 இலட்சத்து 73ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கி உள்ளதாக அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இவற்றில் கர்ப்பிணி தாய்மாருக்கான விற்றமின்கள், நாள்பட்ட நோய்க்கான மருந்துகள், இன்ட்ராவாஸ்குலர் (intravascular) வடிகுழாய்கள், சிரிஞ்ச்கள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளன என தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் நன்கொடைகள் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் இலங்கை மற்றும் அமெரிக்க சுகாதார அமைச்சுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்க மற்றும் அமெரிக்கர்களுக்கான பிரதி மருத்துவ அதிகாரி சாதனா ராஜமூர்த்தி ஆகியோருக்கிடையில் வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அமெரிக்காகெயார்ஸ் (AmericaCares) என்பது ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட நிவாரண மற்றும் மேம்பாட்டு அமைப்பாகும்.இது வறுமை அல்லது பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்ற மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த அமைப்பு இதுவரையில் அமெரிக்கா உட்பட 164 நாடுகளுக்கு 20 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான உதவிகளை வழங்கி உள்ளதுடன் ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பு சராசரியாக 85 நாடுகளுக்கான உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.