தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு தொடர்ந்து இருக்கும் நிலையில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், என்பது பற்றி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் புஷ்கலா அவர்கள் பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு இப்போது காய்ச்சல் மற்றும் சளித்தொந்தரவு அதிகமாக இருக்கிறதே ? இது இயல்பு தானா ?
இப்போது பருவகாலம் மாறத் தொடங்கியிருக்கிறது. அதனால் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது இயல்பானதுதான். சாதாரண வைரஸ் காய்ச்சலின் தாக்கம் 4 முதல் 5 நாட்கள் வரை இருக்கும். குழந்தைகளுக்கு இப்போது அதுதான் நடக்கிறது. சிலருக்கு மட்டும் 7 இல் இருந்து 10 நாட்கள் வரை அதன் தாக்கம் இருக்கும். மருத்துவரிடம் சரியான சிகிச்சை மேற்கொண்டாலே இந்த காய்ச்சல் சரியாகி விடும்.
ஆனால் பெற்றோர்கள் பலரிடம் பயம் காணப்படுகிறதே?
கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக குழந்தைகள் வீட்டிற்கு உள்ளேயே இருந்தார்கள். இப்போதுதான் பள்ளிக்கு செல்ல தொடங்கி உள்ளனர். குழந்தைகளுக்கு 6 வயது வரை அவ்வப்போது காய்ச்சல் மற்றும் சளி வந்து சென்றால் தான் அவர்களுடைய நோய் எதிர்ப்பு திறன் வலுப்பெற்று பிற்காலத்தில் அவர்கள் ஆரோக்யமான நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதற்கு உதவியாக இருக்கும். இதனால் பெரிதாக பயப்படத்தேவையில்லை. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரிடம் சென்று அவர் சொல்வதை பின்பற்றினாலே போதுமானது.
ஃப்ளூ காய்ச்சலுக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் என்ன வித்தியாசம் ?
2 காய்ச்சலுமே வைரசால் வரக்கூடிய காய்ச்சல்தான். டெங்கு காய்ச்சல் என்றால் காய்ச்சல், தலைவலி, கண்ணை சுற்றி வலி, உடல் வலி போன்றவை இருக்கும். இது கொசுக்கள் மூலம் பரவும். ஃப்ளூ காய்ச்சல் என்றால் காய்ச்சல், சளி, இருமல், தும்மல் ஆகியவை உண்டாகும். இது காற்றில் பரவும்.
- கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்?
- குழந்தைகளிடம் பெற்றோர் செய்யக்கூடாதவை என்னென்ன?
- நம் குழந்தைகளுடன் நாமும் வளர்வோம் – மூன்று பெண் குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் அனுபவப் பகிர்வு
தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்ததும் சில பெற்றோர்கள் மருந்து கடைகளில் தானாக மருந்து வாங்குகிறார்களே. இது சரியா ?
இது முற்றிலும் தவறு. ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்படக்கூடிய காய்ச்சல் மற்றும் சளி போன்றவைகளின் தன்மையை வைத்து மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். இது நோயின் அளவைப் பொறுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். சாதாரண பாராசிட்டமால் மாத்திரைதானே என்று அளவு தெரியாமல் எடுத்துக் கொண்டால் அது கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் குழந்தைகளுக்கு எப்போதும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில்தான் மருந்துகளை கொடுக்க வேண்டும்.
சில குழந்தைகளுக்கு சளி தொந்தரவு 10 நாட்களுக்கு மேல் இருக்கிறதே? இதற்கு என்ன செய்ய வேண்டும் ?
சில குழந்தைகளுக்கு இது போன்று ஏற்படும். ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் சுறுசுறுப்பாக இருத்தல், சாப்பிடுதல், போன்ற இயல்பான விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் பயப்படதேவையில்லை. அது தானாக சரியாகி விடும். மூச்சிரைத்தல் போன்ற பிரச்சனை இருக்கும் குழந்தைகளுக்கு மருத்துவரிடம் செய்ய வேண்டும்.
சாதாரணமாக இருக்கும் பட்சத்தில் வீட்டிலேயே சரியான உணவுகளை கொடுக்கும் போது அது தானாகவே சரியாகி விடும். காய்ச்சல் இல்லை, உடல்வலி இல்லை என்றால் பயப்படத்தேவையில்லை. உணவை சூடாக கொடுப்பது, தண்ணீரை காய்ச்சி கொடுப்பது, மஞ்சள் மிளகு தூள் கலந்த பால் , இஞ்சி மற்றும் பூண்டு ஆகிவற்றை உணவுகளில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
எந்த அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரிடம் உடனே செல்ல வேண்டும் ?
100 டிகிரிக்கும் மேல் காய்ச்சல், சிறு குழந்தையாக இருந்தால் 5 மணி நேரத்திற்கு மேல் பால் குடிக்காமல் தூங்கி கொண்டே இருப்பது, குழந்தை அழாமல் இருப்பது, மூச்சு விட சிரமப்படுவது, 4 முறைக்கும் குறைவாக சிறுநீர் கழிக்காமல் இருத்தல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.
காய்ச்சல் வந்தால் ரத்தப்பரிசோதைனையும் உடனடியாக எடுக்க வேண்டுமா ?
எந்த காய்ச்சல் வந்தாலும் அது 5 நாட்களுக்குள் சரியாக வேண்டும். அதற்கு மேல் விட்டு விட்டு வந்தால் நாங்கள் ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளவோம். 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அது டெங்குவாகவோ அல்லது டைஃபாய்ட் ஆகவோ இருக்கலாம்.
குழந்தைகளுக்கு இந்த காலகட்டத்தில் என்ன உணவுகளை கொடுக்க வேண்டும் ?
பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த புரதம் அதிகம் உள்ள உணவுகளை கொடுத்தல் நல்லது. பருப்பு, கடலை மிட்டாய், நெய், பால் போன்ற நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் உணவுகளை கொடுக்க வேண்டும். வெளியில் இருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மழைக்காலம் தொடங்க இருப்பதால் ஜூஸ், ஐஸ்கீரீம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு இன்புளூயன்சா தடுப்பூசி எப்போது செலுத்த வேண்டும் ?
ஒரு வயதிற்குள் இருக்கும் எல்லா குழந்தைகளும் கட்டாயம் இன்புளூயன்சா தடுப்பூசி செலுத்த வேண்டும். ஒன்று வயது முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை தேவைப்பட்டால் போடலாம். அடிக்கடி சளித்தொந்தரவு ஏற்படும் குழந்தைகள், மூச்சுத் திணறல் உள்ள குழந்தைகள், நிமோனியா, கல்லீரல், சிறுநீரகம், இதயம் போற்றவற்றில் பிரச்சனைகள் உள்ள குழந்தைகள் கண்டிப்பாக ஆண்டு தோறும் இன்ஃபுளூயன்சா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்ஃபுளூயன்சா வைரஸ் ஒவ்வோர் ஆண்டும் தன்னை உருமாற்றிக் கொண்டே இருக்கும். அதற்கு தகுந்தாற்போல் தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்படும். மேலும் இந்த காலகட்டத்தில் குழந்தைகளை கூட்டம் உள்ள இடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
https://www.youtube.com/watch?v=EuR0eb3zVok
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்