சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 25-ம் தேதி முதல் 3 நாள் நடைபயணம் தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்திய அரசியல் சாசன அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களை பாஜக தொடுத்து வருகிறது. நீதித் துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை என அனைத்து துறைகளையும் பாஜக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, பாதுகாப்பு வழங்கப்பட்ட தலித்துகள், சிறுபான்மையினர், பின்தங்கிய சமுதாயத்தினர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடக்குமுறைக்கு ஆளாகி பலர் உயிரிழந்துள்ளனர்.
சுதந்திர இந்தியா இதுவரை காணாத வகையில் கடுமையான அடக்குமுறையை மோடி அரசு எதிர்க்கட்சிகளின் மீது ஏவி விட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி, சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கிமீ நடைபயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை, எஸ்.டி. துறை, பிற்படுத்தப்பட்டோர் துறை, ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன், சிறுபான்மைத் துறை, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு என 8 அமைப்புகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்தப் பயணத்தை 25-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கி வைக்கிறேன். இந்த பயணம் 26, 27 ஆகிய தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த நடைபயணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித், சாய்ராம் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.