அரசியலில் நுழைந்தது முதல் பலரை ஏமாற்றியவர் நிதிஷ்: அமித்ஷா தாக்கு| Dinamalar

புர்னியா: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், அரசியலில் நுழைந்தது முதல் பலரை ஏமாற்றியவர் எனவும், அவரிடம் லாலு கவனமுடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார்.

பீஹாரில், பாஜ., கூட்டணியை முறித்து கொண்ட முதல்வர் நிதிஷ்குமார், லாலு கட்சி ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். இதன் பிறகு முதன்முறையாக அந்த மாநிலத்திற்கு சென்றுள்ள அமித்ஷா, புர்னியா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: நிதிஷால் சிறந்த நிர்வாகத்தை தர முடியுமா? பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி பீஹார் மக்களையும், பா.ஜ.வையும் நிதிஷ் ஏமாற்றிவிட்டார். 2024ல் லாலு நிதிஷ் கூட்டணி தோல்வியடையும். பீஹாரில் பா.ஜ., ஆட்சி அமையும். கூட்டணியை மாற்றியதால், நிதிஷ் பிரதமராக முடியுமா. அரசியலில் நுழைந்தது முதல் பலரை ஏமாற்றி உள்ளார். நாளை, காங்கிரஸ் மடியில் அமர்ந்து கொண்டு உங்களையும் கழற்றி விடுவார் என்பதால் லாலு கவனமாக இருக்க வேண்டும்.
கடந்த 2014ல் நிதிஷ்குமார் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றார். 2024 லோக்சபா தேர்தல் வரட்டும். லாலு நிதிஷ் கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள். அத்துடன் இருவரும் அரசியலை விட்டுவிடுவார்கள். இங்கு 2025 தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

நிதிஷ்குமாருக்கு, பீஹார் மக்கள் நீண்ட காலமாக சந்தேகத்தின் பலனை கொடுத்தனர். மீண்டும், ஆட்சிக்கு வர முடியாது என்பது நிதிஷ் மற்றும் லாலுவுக்கு தெரியும். இந்த முறை மோடியின தாமரை பீஹாரில் மலரும். ஆட்சியில்,லாலு கலந்து கொண்டதும், லாலு மடியில் அமர்ந்ததும் மாநிலத்தில் அச்சம் நிலவுகிறது. இந்த எல்லை மாவட்டங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாகும். யாரும் பயப்பட தேவையில்லை. மத்தியில் மோடி ஆட்சி அமைந்துள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.