Tejashwi Yadav Slams Amit Shah: பீகார் மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்த பிறகு முதல் முறையாக அங்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று பூர்னியாவில் நடைபெற்ற “ஜன் பவ்னா பேரணி”யில் உரையாற்றிய போது, மாநில அரசை கடுமையாக தாக்கி பேசினார். ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துக்கொண்டு ஆட்சி நடத்துவதால், பீகாரில் தற்போது அச்சமான சூழல் நிலவுகிறது என்றார். பீகார் மாநில ஆட்சியில் லாலு கைகோர்த்துள்ளார். தற்போது லாலு ஜியின் மடியில் நிதீஷ் ஜி அமர்ந்திருகிறார். இவர்கள் இணைந்துள்ளதால், பீகார் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் யாரும் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் நாட்டில் நரேந்திர மோடியின் ஆட்சி நடைபெறுகிறது எனக் கூறினார். அவரது கருத்துக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் உள்துறை அமைச்சராகவோ தெரியவில்லை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா யாரை பயமுறுத்துவதற்காக இங்கு (பீகார்) வந்தார் என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் நாட்டின் உள்துறை அமைச்சர். ஆனால் என்னை பொறுத்த வரை அவரை பார்த்தால், எனக்கு அவர் அரசியல் தலைவராகவோ, உள்துறை அமைச்சராகவோ தெரியவில்லை என்றார். அவர் எனக்கு எப்படி தெரிகிறார் எனபதை நான் சொல்ல விரும்பவில்லை எனவும் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், அமித் ஷா புதிதாக எதுவும் பேசவில்லை. அமித் ஷா எதற்காக வந்துள்ளார், என்ன பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். புதிதாக பேச அமித் ஷாவிடம் எதுவும் இல்லை என மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
பாஜகவின் பிரித்தாளும் கொள்கை பீகாரில் எடுபடாது:
அதேபோல பீகார் மாநில அமைச்சர் அசோக் சவுத்ரி, அமித் ஷாவின் வருகைக் குறித்து பேசும் போது, பீகாரில் அரசியல் சூழ்நிலையை மாற்றலாம் என்ற எண்ணத்தில் வந்துள்ளார். ஆனால் அவர் இதில் வெற்றிபெறப் போவதில்லை. நிதிஷ்குமார் அனைவரையும் அழைத்துச் செல்கிறார். பாஜகவின் பிரித்தாளும் கொள்கை பீகாரில் எடுபடாது. பீகார் மக்கள் அத்தகையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததில்லை. தனது பிரித்தாளும் கொள்கையின் ஒரு பகுதியாக, சீமாஞ்சல் பகுதியை பேரணிக்கு அமித்ஷா தேர்வு செய்துள்ளார் என விமர்சித்துள்ளார்.
முதுகில் குத்தும் வேலையை நிதிஷ் ஜி செய்துள்ளார்:
ஜன் பவ்னா பேரணி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “இன்று நான் எல்லையோர மாவட்டங்களுக்கு வந்ததை அடுத்து, லாலு ஜி மற்றும் நிதிஷ் ஜி அவர்களுக்கு அச்சம். அவர்கள் மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்க விரும்புகிறார்கள். லாலு ஜியின் மடியில் நிதிஷ் ஜி அமர்ந்திருப்பதால், யாரும் பயப்பட வேண்டாம். இன்று நான் வந்துள்ள எல்லையோர மாவட்டங்கள் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதை உங்களுக்குச் சொல்ல வந்துள்ளேன் என்றார். மேலும் முதுகில் குத்தும் வேலையை நிதிஷ் ஜி செய்துள்ளார் என்று அமித்ஷா கடுமையாக விமர்சித்தார்.