சென்னை: இந்திய துறைமுகங்கள் திருத்த வரைவு மசோதாவில், கடல்சார் மாநிலங்களின் உரிமைகளை பாதிப்பதாக இருக்கும் பிரிவுகளை நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதம்: இந்திய துறைமுகங்கள் தொடர்பான திருத்தப்பட்ட வரைவு மசோதாவில், கடல்சார் மாநில அரசுகள், இதர பங்குதாரர்களின் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இதில் மாநில அரசுகள் சிறப்பாக நிர்வகிக்கும், துறைமுகங்களின் அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு அனுபவங்கள் பெரிய அளவில் புறக்கணிக்கப்படுவதாக அச்சம் ஏற்படுகிறது.
தனியார் முதலீடுகளை அனுமதிப்பது, தொழில் தொடங்க உகந்த கொள்கைகளை கொண்டுள்ளதால், கடல்சார் மாநிலங்கள் நிர்வகிக்கும் சிறிய துறைமுகங்கள், மத்திய அரசு நிர்வகிக்கும் பெரிய துறைமுகங்களைவிட அதிகவளர்ச்சியை பெற்றுள்ளன. குறிப்பாக, குஜராத், தமிழகம், ஆந்திராஆகிய மாநிலங்கள் சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி, கடல்சார் சரக்கு கையாள்வதிலும் பங்களிக்கின்றன. ஆனால், சிறு துறைமுகங்களை மையப்படுத்தி கொண்டுவரப்பட்டுள்ள இந்த வரைவு மசோதா, மாநில அரசுகளின் முயற்சிகளை செயலற்றதாக்கிவிடும்.
இதில், கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலை சிறு துறைமுகங்களுக்காக அமைப்பதுதான் முக்கியமான மாற்றம். அந்த கவுன்சில் தற்போது ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வருகிறது. அதை,நிரந்தர பணியாளர்கள் கொண்ட ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றுவது, மாநில அரசின் அதிகாரங்களை ஆக்கிரமிப்பதாக உள்ளது. இது, சிறு துறைமுகங்களின் வளர்ச்சியை பாதிக்கும். மேலும், இந்த கவுன்சிலுக்கு கடல்சார் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள், 5 செயலர்கள், மத்திய அரசின் ஒரு இணை செயலர் நியமிக்கப்படும் நிலையில், துறைமுகத்தின் செயலராக உள்ள மாநிலஅரசு அதிகாரி சேர்க்கப்படவில்லை.
ஜிஎஸ்டி கவுன்சில்போல, இந்தகவுன்சிலும், மாநில அமைச்சர்களை உறுப்பினர்களாகவும், அதிகாரிகளை சிறப்பு அழைப்பாளர்களாகவும் கொண்ட ஆலோசனை அமைப்பாகவே செயல்பட வேண்டும். இதுதவிர, கடல்சார் மாநிலங்கள், அவற்றின் கடல்சார் வாரியங்களின் அதிகாரங்களை ஆக்கிரமிக்கும் இந்த மசோதாவின் சட்டப்பிரிவுகளை கடுமையாக எதிர்க்கிறோம்.
மாநில கடல்சார் வாரியங்களின் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு அதிகாரம் தற்போது மாநில அரசுகளிடம் உள்ளது.அதே நேரம் வரைவு மசோதாவின்படி, இந்த மேல்முறையீட்டு அதிகாரமானது பெரிய துறைமுகங்களுக்காக மத்திய அரசால்உருவாக்கப்படும் தீர்ப்பாயங்களுக்கு சென்றுவிடும். இது மாநில துறைமுகங்கள் தொடர்பான அதிகாரங்களை பாதிக்கும். எனவே, கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் தொடர்பாக திருத்த வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ள பாகங்கள் 2, 3 ஆகியவற்றை முழுமையாக நீக்குவதுடன், இந்த கவுன்சில் ஒரு ஆலோசனை அமைப்பாகவே முன்பிருந்தபடியே செயல்பட வேண்டும். மாநில கடல்சார் வாரியங்கள் தொடர்பான பாகம் 5-ஐ முழுமையாக நீக்க வேண்டும்.
இந்திய துறைமுகங்களுக்கு குறைந்த மையப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதலே போதுமானது. எனவே, தாங்கள் இதில் தலையிட்டு, பெரியவையல்லாத துறைமுகங்களின் தொடர் வளர்ச்சியை உறுதி செய்யவும், மாநிலங்களின் வர்த்தகத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர்தெரிவித்துள்ளார்.