ஊதிய நிலுவை, பேராசிரியர் நியமனங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: 745 ஆசிரியர் அல்லா பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே உள்ள 7000 உதவி பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட 41 கலை – அறிவியல் கல்லூரிகளின் ஊதியச் சுமையை அரசே ஏற்றுக்கொள்ளும்; அவற்றுக்கு 2248 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது!

அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகும் அவற்றின் ஊழியர்களுக்கு பல்கலை.களே ஊதியம் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டதால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தேன். அந்த குறை சரி செய்யப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!

அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதற்காக பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு சுமார் ரூ.300 கோடி வழங்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், அவற்றுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்!

41 அரசு கல்லூரிகளுக்கும் 2248 உதவிப் பேராசிரியர், 745 ஆசிரியர் அல்லா பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றையும், ஏற்கனவே உள்ள 7000 உதவி பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.