திருச்சி : தமிழகத்தை பொறுத்தவரை காய்ந்த சிகப்பு நிற மிளகாய் இறக்குமதி என்பது மாவட்டத்திற்குள்ளேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஆந்திர மாநிலத்தில் இருந்துநி தமிழகத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது.வழக்கமாக ஒரு கிலோ உள்ளுர் காய்ந்த மிளகாய் ரூ. 150க்கு விற்பனையாகி வந்தது. அதேபோல் ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்ந்த மிளகாய் ஒரு கிலோ ரூ.180க்கு விற்பனையாகி வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் கனமழையாலும், காற்று பலமாக வீசுவதாலும் விளைச்சல் குறைந்துள்ளது. அதோடு மழையினால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆங்காங்கே மிளகாய்கள் தேங்கிவந்தது. இதனால் கடந்த 15 நாட்களாக கணிசமாக விலை உயர்ந்து வந்தது. நேற்று முதல் விலை உச்சத்தை தொட்டு அதே விலை அடுத்துவரும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து திருச்சி காந்தி மார்க்கெட் காய்ந்த மிளகாய் மொத்த வியாபாரிகள் கூறுகையில், திருச்சி மாவட்டத்திற்கு தேவையான காய்ந்த மிளகாய் ஒவ்வொரு வாரத்திற்கும் 10 டன் வரை இறக்குமதியாகும். அதில் உள்ளுர் மிளகாய் கரூர், அரவக்குறிச்சி, பாளையம், கோபிசெட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 முதல் 5 டன் வரை வந்து சேரும். அதேபோல் ஆந்திராவில் இருந்தும் 5 முதல் 6 டன் வரையில் இறக்குமதி செய்யப்படும்.
தற்போது மழை மற்றும் காற்று காலம் என்பதால் விளைச்சல் குறைந்துள்ளது. மற்றொரு பக்கம் மழையால் லோடுகளும் வரவில்லை. எனவே தற்போது மொத்த விற்பனையில் ஒரு கிலோ உள்ளுர் காய்ந்த மிளகாய் ரூ.250 முதல் 280 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மிளகாய் ஒரு கிலோ ரூ.285 முதல் 300 வரை விற்பனையாகிறது. இதை வாங்கி செல்லும் சில்லறை வர்த்தகர்கள், உள்ளுர் மிளகாயை ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை செய்கிறார்கள்.
ஆந்திர மிளகாயை ஒரு கிலோ ரூ.320வரை விற்பனை செய்கிறார்கள்.எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த விலையேற்றம் உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக அரேபிய நாடுகளுக்கு இந்த காய்ந்த மிளகாய் ஏற்றுமதி செய்யப்படும். அந்த ஏற்றுமதியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி, சிறு வியாபாரிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.