திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகங்களில் என்ஐஏ நடத்திய சோதனைகளுக்கும், அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும், கேரளாவில் பிஎஃப்ஐ அமைப்பு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. “அதிகாலை முதல் அந்தி வரை” என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கியது.
தீவிரவாதிகளுடன் தொடர்பு, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகம், அதன் தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத்துறை வியாழக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனை, கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் 12 மணிநேர ஹர்தால் (கடையடைப்பு) போராட்டத்திற்கு பிஎஃப்ஐ கட்சி வியாழக்கிழமை அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கடையடைப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.
இந்த பந்த் காரணமாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட காவல்துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக சட்டத்தை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடையடைப்பு போராட்டத்தின் போது, ஆலுவா அருகே கம்பனிபாடி என்ற இடத்தில் மாநில அரசின் கேஎஸ்ஆர்டிசி பேருந்து ஒன்று அடித்து சேதப்படுத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் பிற வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கோழிக்கோடு பகுதியில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்தநிலையில், மாநிலத்தில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும். தேவை ஏற்படும் பட்சத்தில் மருத்துவமனை, விமான நிலையம், ரயில் நிலையங்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று மாநில அரசு போக்குவரத்து துறையான கேஎஸ்ஆர்டிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இந்த கடையடைப்பு போராட்டம் தேவையற்றது என்றும், சட்டத்தை மீறுவோர் மீது பினராய் விஜயன் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில பாஜக தலைவர் கே,. சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆர்எஸ்எஸ்-ன் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய பாசிச அரசு, மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்ப்பு குரல்களை ஒடுக்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வெள்ளிக்கிழமை (செப்.23) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்து.