கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பொய்யான தகவல்களை சமூகவலைதளங்களில் பரவியதாக வழக்குபதிவு செய்யப்பட்டதில் சம்மன் அனுப்பப்பட்ட 5 யூடிப்பர்கள் விசாரணைக்காக நேரில் ஆஜரான நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி ஜீலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நியமித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களை கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்களை கைது செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கவலரம்
இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மாணவி மரணம் குறித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு விதமான சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் வாட்ஸ் அப் குழுக்களை அமைத்து அதில் உறுப்பினர்களை சேர்த்து கலவரத்தை தூண்டும் வகையில் தகவல் மற்றும் கருத்துக்களை பதிவிட்ட கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய், கள்ளக்குறிச்சி மாவட்டம் துருவூர் கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி,காச்சக்குடி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் உள்ளிட்ட மூன்று வாட்ஸ் அப் குழு அட்மின்கள் கைது செய்யப்பட்டனர்.
யூடியூப் சேனல்கள்
இந்த நிலையில் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பிரபல யூடியூப் சேனல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கு தற்போது சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமல்லாது பிரபல முன்னாள் செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்களின் யூட்யூப் சேனல்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு பிரிவு
இதனை தொடர்ந்து ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட யூடிப்பர்களான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் குமார், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வடிவேல், சென்னை சேர்ந்த முகம்மது ஷபி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய ஐந்து யூடியூபர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இவர்கள் ஐந்து பேரும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். இவர்களிடம் பல்வேறு கோணங்களில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கிடுக்குப்பிடி விசாரணை
விசாரணைக்கு பின்னர் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து இனிவரும் காலங்களில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள யூடியூபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.