ஹிதேந்திரன்… அவ்வளவு சீக்கிரம் நம் இதயத்தைவிட்டு நீங்காத; நீக்கமுடியாத பெயர். வெறும் பெயர் அல்ல… தமிழ் மக்களின் இதயங்களில் செதுக்கப்பட்ட விழிப்புணர்வு கல்வெட்டு. ‘துடி துடித்துக்கொண்டிருக்கும் உங்கள் மகனின் இதயத்தை எடுத்து இன்னொருவரின் உடம்பில் பொருத்தலாமா?’ என்று டாக்டர்கள் கேட்டால் நம் இதயம் என்ன பாடுபாடும். யோசிக்கும்போதே இதயத்தில் இரத்தக்கசிவு ஏற்படுவதுபோல் இருக்கிறதல்லவா? ஆனால், ஒரு சிறுமியின் உயிரைக்காப்பாற்ற மூளைச்சாவு அடைந்த தனது மகனின் துடித்துக்கொண்டிருக்கும் உயிருள்ள இதயத்தை ஹிதேந்திரனின் பெற்றோர் தானமாகக் கொடுத்தபிறகுதான் தமிழகத்தில் உறுப்புதானம் கவனம் பெறத் தொடங்கியது. இந்தியாவில் உடல் உறுப்பு தானங்களில் தமிழகமும் முதன்மை மாநிலமாகத் தற்போது இருப்பதற்குக் காரணம் ஹிதேந்திரன் குடும்பம் போல பலர் எடுத்த முடிவுதான் காரணம். இன்று ஹிதேந்திரனின் 14-வது நினைவு தினம்.
கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி விபத்தில் சிக்கிய ஹிதேந்திரன் இரண்டு நாள் கடந்த பின்னர் மூளைச்சாவு அடைந்தது, இதே செப்டம்பர் 23ம் தேதிதான். சிறுமி அபிராமிக்கு ஹிதேந்திரனின் இதயம் பொருத்தப்பட்டதும் இதே நாளில்தான். ஹிதேந்திரனின் தந்தை அசோகனிடம் பேசினோம்.
“நல்லாருக்கோம். ஹிதேந்திரன் அம்மா கிளினிக்கில் பிஸியா இருக்கா. அவனோட தம்பி லக்ஷ்மணன் எம்.பி.பி.எஸ் ஃபைனல் இயர் படிக்கிறான். எங்கப் பிள்ளையைப் பறிகொடுத்தப் பிறகு வாழ்க்கைல எல்லாமே தோல்வி அடைஞ்சுட்டதா நினைச்சோம். ஆனா, அது தப்புன்னு ஹிதேந்திரன் ஃப்ரண்ட்ஸ் உணர்த்திட்டாங்க. ஏன்னா, இப்போவரை எங்களை அப்பா, அம்மாவா நினைச்சி நலம் விசாரிக்கிறாங்க. போனமாசம் ஹிதேந்திரன் ஃப்ரண்டு திருமணத்துல கலந்துகிட்டு வாழ்த்தினோம்.
அதோட, ஹிதேந்திரன் மூலமா சிறுநீரகங்கள் பெற்றவர் நலமா இருக்கார். கல்லீரல் தானம் பெற்ற கேரளா வயநாட்டைச் சேர்ந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தைப் பிறந்திருக்கு. இதையெல்லாம் கேட்கும்போது சந்தோஷமாவும், நம்ம பையன் உயிரோடத்தான் இருக்காங்கிற உணர்வையும் கொடுக்குது.
ஹிதேந்திரன் வயசு பசங்களைப் பார்க்கும்போது, “நம்ம பையன் இருந்திருந்தா இந்நேரம் இங்க வேலைப் பார்த்திருப்பான், மேரேஜ் ஆகிருக்குமே”ன்னு தோணும். அப்போல்லாம், மனம் கொந்தளிப்பாவும் துடிப்பாவும் வேதனையாவும் இருக்கும். ஆனா, அவன் இறப்புக்குப்பிறகு உடல் உறுப்பு தானம் செய்துள்ள 1486 குடும்பங்களும் எங்களை மாதிரியேதானே துடிச்சிக்கிட்டிருக்கும் என்று நினைத்துக்கொள்வோம். எங்க எல்லோருக்கும் வலி, வேதனை இருந்தாலும் உடல் உறுப்புகளை தானம் செய்தது மூலமா, எங்கப் பிள்ளைங்க வாழ்ந்திட்டு இருக்காங்கங்கிறதை நினைச்சு ஆறுதல் அடைஞ்சிக்கிறோம்.
கடந்த ரெண்டு வருஷமா கொரோனாவால, கல்லூரிகளுக்குப் போய் உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வைச் செய்ய முடியலை. சில மாதங்களா விழிப்புணர்வு பணியை திரும்பவும் செய்ய ஆரம்பிச்சிட்டேன். இதுலதான், எனக்கு மன நிம்மதியே கிடைச்சிருக்கு. அரசும், இன்னைக்கு ஹிதேந்திரன் நினைவுதினத்தை தமிழ்நாடு ஹிதேந்திரன் உடல் உறுப்புதான நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்து ஜி.ஓவும் போட்டார்கள். இன்று மாலை ஓமந்துரார் அரசு மருத்துவமனையில், இதை அறிவித்து உடல் உறுப்புதானம் செய்த குடும்பத்தினர்கள் அனைவரையும் கெளரவிக்க அழைச்சிருக்காங்க. அதுக்குதான், கிளம்பிட்டிருக்கோம்” என்கிறார்.