புதுடெல்லி: குஜராத்தின் ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2,747 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம், கப்பல் கட்டுதல் மற்றும் பழுது பார்க்கும் தொழிலை மேற்கொண்டு வந்தது. இந்த நிறுவனம் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெற்றுள்ளது. வாங்கிய கடனை குறிப்பிட்ட நோக்கத்துக்காக பயன்படுத்தாமல், வேறு வகைகளில் செலவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஏபிஜி நிறுவனத் தலைவரான ரிஷி அகர்வாலை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இது தொடர்பாக நேற்று அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சட்ட விரோத பண பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏபிஜி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2,747.69 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் சூரத் மற்றும் தகெஜ்ஜில் உள்ள கப்பல் கட்டும் தளம், விவசாய நிலங்கள், வீட்டு மனைகள், குஜராத், மகாராஷ்டிராவில் உள்ள வர்த்தக மற்றும் குடியிருப்பு வளாகங்கள், நிறுவனத்துக்கு சொந்தமான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கிறது,’ என கூறப்பட்டுள்ளது.