ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது ஓவியர் ஒருவர், தன்னுடைய முன்னாள் காதலியின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பாதிக்கப்பட்டப் பெண், போலீஸில் புகாரளித்ததையடுத்து குற்றம்சாட்டப்பட்ட நபர், ஜார்கண்ட்டின் டோரண்டா பகுதியில் வசிக்கும் முகமது தன்சீம் எனத் தெரியவந்திருக்கிறது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் போலீஸிடம், “கடந்த பிப்ரவரியில் இன்ஸ்டாகிராமில், அந்த நபரின் ஓவியக் கலையால் ஈர்க்கப்பட்டு அவருடன் பழகினேன். இருவரும் காதலித்தோம். அதனால் ஒருகட்டத்தில் அவருக்கு நான் என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை அனுப்பினேன். ஆனால், தற்போது அந்த நபர் என்னை மிரட்டுகிறார்” என்று புகாரளித்திருக்கிறார்.
அந்தப் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து முகமதைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், “டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியைச் சேர்ந்த அந்த பாதிக்கப்பட்டப் பெண், சில நாள்களுக்கு முன்பு குற்றம்சாட்டப்பட்ட நபரை நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது அந்தப் பெண், எதார்த்தமாகக் குற்றம்சாட்டப்பட்ட நபரின் செல்போனை பார்த்தபோது, அதில் தன்னுடைய நிர்வாண படங்கள் கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்திருக்கிறார். மேலும் அதில், மற்றவர்களின் அந்தரங்க படங்களும், வீடியோக்களும் இருப்பதைக்கண்டு அந்த நபருடனான உறவை முறித்துக்கொண்டார். இதில் கோபமடைந்த அந்த நபர், ஆத்திரத்தில் அந்த பெண்ணின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார். பின்னர் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் அந்த நபரைக் கைதுசெய்தோம்” எனக் கூறினார்.