ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்விற்கு இலங்கைத் தூதுக்குழுவை வழிநடத்திச் சென்றுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, ஐ.நா. உறுப்பு நாடுகளின் தூதுக்குழுக்களின் தலைவர்கள் பலரை நியூயோர்க்கில் வைத்து சந்தித்து, பல்வேறு உயர்மட்ட அமர்வுகளிலும் உரையாற்றினார்.
அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய இரவு விருந்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி, அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடன் மற்றும் முதல் பெண்மணி கலாநிதி ஜில் பைடன் ஆகியோரை சந்தித்தார்.
பங்களாதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார். அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், சோமாலியாவின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் அப்ஷிர் உமர் ஜமா, நமீபியாவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் ஜெனெலி மட்டுண்டு, உஸ்பெகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் நோரோவ் மற்றும் சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் மற்றும் ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சர் அரரத் மிர்சோயன் ஆகியோருடனும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
அணிசேரா இயக்கத்தின் அமைச்சர்கள் கூட்டம், ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் அமைச்சர்கள் கூட்டம் மற்றும் சீனா நடாத்திய உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் நண்பர்கள் குழுவின் அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி உரையாற்றினார்.
இலங்கையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலுக்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் பிராந்தியப் பணிப்பாளர் கன்னி விக்னராஜாவையும் அமைச்சர் சந்தித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி 2022 செப்டம்பர் 24ஆந் திகதி 77வது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 செப்டம்பர் 23