கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீரால் பலவிதமான நோய்கள் உள்ளவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தியகரசனபள்ளி, கொழும்பூர், மாதர்சனபள்ளி, எம் தொட்டி, சிகரலப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 800 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தியகரசனபள்ளி கிராமத்திற்கு அருகே செயல்பட்டு வரும் தனியார் தொழிச்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகள் மாசடைந்து இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கழிவு நீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, அப்பகுதி மக்கள் காய்ச்சல், தொற்று நோய் மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கழிவு நீரால் நோய் தொற்றுக்கு உள்ளாகும் கால்நடைகள் உயிரிழப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர்கள் தங்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் விரைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.