ஆந்திர மாநிலம் கம்பம் மாவட்டம் சித்தகானி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ஜமால் சாயபு. இவரது மனைவி ஷேக் இமாம் பீ (46). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இமாம் பீ-க்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகன் ராவ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது.
இமாம் பீ, மோகன் ராவுடன் வீட்டில் தனிமையில் இருந்தபோது அவரது கணவர் ஷேக் ஜமால் சாயபு பார்த்துவிட்டார். ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என கள்ளக்காதலன் மோகன் ராவிடம் இமாம் பீ தெரிவித்துள்ளார். கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்த அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் 3 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்து 2 ஊசிகளை வாங்கி வந்தனர்.
இமாம் பீ ஒரு ஊசியும், மோகன் ராவிடம் ஒரு ஊசியும் வைத்துக்கொண்டனர். இமாம் பீயால் கணவருக்கு விஷ ஊசி போட முடியாத சூழ்நிலை நிலவியது. இதையடுத்து இமாம் பீ தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து கணவருக்கு போன் செய்து நாளை மகள் வீட்டிற்கு வந்து என்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதுகுறித்து மோகன்ராவிடம் தெரிவித்த இமாம் பீ அவர் வரும் வழியில் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிக்கொண்டு விஷ ஊசி போட்டு கொல்ல வேண்டும் என திட்டம் போட்டு கொடுத்துள்ளார்.
மோகன் ராவ் தனது நண்பர்களான வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகியோருடன் சேர்ந்து மதிகொண்ட மண்டலம் அருகே பைக்கில் காத்துக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஷேக் ஜமால் சாயபு பைக்கை நிறுத்தி லிப்ட் கேட்டு வெங்கடேஷ் பைக்கில் ஏறிக்கொண்டார். செல்லும் வழியில் ஷேக் ஜமால் சாயபுக்கு இடுப்பில் விஷ ஊசியை செலுத்திவிட்டு வெங்கடேஷ் தப்பிச் சென்றார். இதில் மயங்கி சரிந்த ஷேக் ஜமால் சாயபு பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இமாம் பீ செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி மோகன் ராவிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஷேக் இமாம் பீ, அவரது கள்ளக்காதலன் மோகன் ராவ் அவரது நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.