கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்க சுவாமி திருக்கோயிலில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை தொன்மையான திருக்கோயில்களை அதன் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, அத்திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், பூதப்பாண்டியில் அமைந்துள்ள அருள்மிகு பூதலிங்க சுவாமி திருக்கோயிலில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளை இன்று (23.09.2022), இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்க சுவாமி திருக்கோயிலில் சுவாமி மற்றும் சிவகாமி அம்மன் சன்னதிகள், விமானங்கள், கொடிமர மண்டபம், அர்த்த மண்டபம், நமஸ்கார மண்டபம் போன்றவற்றை பழுது பார்த்தல், மின் இணைப்புகளை சரிசெய்தல், மேல வாசல் கோபுர திருப்பணிகள், சுவாமி உலா வரும் வாகனங்களை செப்பனிடுதல், மதிற்சுவரை சீரமைத்தல், முகப்பில் நிழற்கூடம் அமைத்தல், திருக்கோயிலுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நிர்வாகத்தின் மூலமும் உபயதாரர்கள் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தேவையான உதவிகளை செய்திடவும் தயாராக உள்ளோம். இப்பணிகள் நிறைவுற்ற பின் வருகின்ற 2023 ஜனவரி மாதம் 26ஆம் தேதி திருக்கோயில் குடமுழுக்கு நடத்தப்படும் “ என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் இரா. கண்ணன், இ.ஆ.ப., கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த் இஆப, இணை ஆணையர் இரா.ஞானசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.