சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தனியார் ஆலைக்கு வரும் லாரியை வழிமறித்து காட்டு யானைகள் கரும்பை ருசிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு லாரிகளில் பாரம் ஏற்றி வனப்பகுதியில் அமைந்துள்ள சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வனப்பகுதி வழியாக கரும்பு லாரிகள் பயணிக்கும்போது காட்டு யானைகள் லாரியை வழிமறித்து லாரியில் பாரம் ஏற்றப்பட்டுள்ள கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் பறித்து தின்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. நேற்று மாலை தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.
பண்ணாரி வனப்பகுதியில் லாரி சென்றபோது ஒரு காட்டு யானை கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை தனது தும்பிக்கையால் பறித்து தின்றபடி சாலையில் நின்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரும்பு தின்று பழகிய யானைகள் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சமும், பீதியும் அடைந்துள்ளனர்.