கரூர்: சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவர் போலீஸில் அளித்த புகாரின் பேரில், அவரிடம் ஆட்சியர் அலுவலக அதிகாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை நடத்தினர்.
கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியமான நன்னியூர் ஊராட்சி மன்றத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 10 பேர் உள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சுதா பட்டியலினத்தைச் சேர்ந்தவர். வாங்கல் போலீஸில் சுதா நேற்று (செப். 22) புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள தனது கடமையை செய்யவிடாமல் 9வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி (அதிமுக) குறுக்கீடு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியும், சாதி ரீதியான பாகுபாடுளை செய்து வருவதாகவும, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமாரசாமி (திமுக) ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து அலுவலகப் பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், ஊராட்சி செயலாளர் நளினி அலுவலகப் பணியில் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
மேலும், நளினியின் கணவர் மூர்த்தி தேவையில்லாமல் ஊராட்சித் மன்ற அலுவலகத்திற்கு வந்து கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறிக் கொண்டு சம்பளம் தருமாறு கேட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளளார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், ஊராட்சி மன்றத் தலைவர் சுதாவிடம் நேற்று விசாரணை நடத்தியுள்ளார். தொடர்ந்து ஊரக வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) லீலாகுமார் மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சுதாவிடம் இன்று நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து வாங்கல் காவல் நிலையத்திற்கு சுதாவை அழைத்து சென்று, இன்ஸ்பெக்டர் உதயகுமார் முன்னிலையில் விஜயலட்சுமி விசாரணை நடத்தினார். புகார் மீது விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகே புகாரின் உண்மைத் தன்மை குறித்து தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.