பெங்களூரு: கர்நாடக பாஜக அரசு கமிஷன் அரசாக செயல்படுவதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் அம்மாநில சட்டமன்றத்தில் போராட்டம் நடத்தியதை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடக சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியது. கூட்டத்தொடரில் இறுதி நாளான இன்று அவை தொடங்கியதும் கர்நாடக அரசு 40% கமிஷன் பெறுவதாக எழுந்திருக்கும் புகார் குறித்து விவாதிக்க மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் அனுமதி கோரி முழக்கமிட்டனர். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, இதுகுறித்து தான் கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என்று வாதம் செய்தார்.
இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் அவையின் மையப்பகுதிக்கு சென்று பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டதால் குழப்பம் எழுந்தது. அமளிக்கு இடையே அவையை நடத்த சபாநாயகர் விஷ்வேஸ்வர் ஹெக்டே மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து சட்டமன்றத்தை நாள் முழுவதும் ஒத்திவைத்து விஷ்வேஸ்வர் உத்தரவிட்டுள்ளார்.