கள்ளக்குறிச்சி விவகாரம்: விசாரணைக்கு ஆஜரான யூடியூபர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், இந்த சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு மாறான தகவல்கள் பகிரப்பட்டு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி வாகனங்களுக்கு தீவைத்ததுடன், வகுப்பறைகளையும் சேதப்படுத்தினர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறையினர், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சியில் நேரில் விசாரணை நடத்திய காவல்துறை, பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

இதுஒருபுறமிருக்க, டிவிட்டர், பேஸ்புக் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலும், உண்மைக்கு மாறாக தகவல் பரப்பியவர்களையும் அடையாளம் காணப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை உண்மைக்கு மாறாக தகவல் பரப்பியதாக கூறி சுமார் 25க்கும் மேற்பட்ட யூ டியூபர்கள் மீது கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் படி சம்மன் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த நவீன் குமார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல், சென்னை பகுதியை சேர்ந்த முகம்மது ஷபி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய ஐந்து பேரும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.