கட்சி என்றால் கோஷ்டி மோதல் உருவாவது இயல்பு தான் என்றாலும் காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் எப்போதும் ஒரு படி மேல்தான். மாநில அளவில் என்றாலும், தேசிய அளவில் என்றாலும் இதுதான் நிலைமை. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட கட்சி என்பதால் இதை தவிர்க்க முடியாது என்றும் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
நாட்டை அதிகமுறை ஆண்ட கட்சி தற்போது தங்களது தலைவரை தேர்ந்தெடுக்க திணறி வருகிறது. இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வரும் நிலையில் உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் வேறு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவானது. ராகுல் காந்தியும் தலைவர் பதவி தனக்கு வேண்டாம் என திட்டவட்டமாக மறுத்துவிட்டதால் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
1998இல் சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தற்கு பிறகு நேரு குடும்பத்துக்கு வெளியே இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் வரப்போகிறார்.
இது ஒரு மாற்றத்துக்கான தொடக்கமாக இருக்கும் என்று கொண்டாலும் சச்சரவுகளுக்கும் பஞ்சமிருக்காது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவு வெளியாகும்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், “காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளேன். தலைவர் பதவி மீது ராகுல் காந்தி குடும்பத்தினருக்கு ஆசையில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் வலிமையான எதிர்க்கட்சி தேவைப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, சோனியா காந்தி மற்றும் அஜய் மக்கான் ஆகியோர் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக பேசியுள்ளார்.
அவர், “காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடியவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால் நீங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவியை பெற உள்ளீர்கள். இது ஒரு கட்சிப் பதவி மட்டுமல்ல. இது ஒரு சித்தாந்த பதவியாகும். உதய்ப்பூர் மாநாட்டில் நாம் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அது கண்டிப்பாக கடைபிடிக்கப்படும்” என்று கூறினார்.
உதய்ப்பூர் மாநாட்டில் ஒருவருக்கு ஒரு பதவி தான் என்று முடிவு செய்யப்பட்டது. அப்படியானால் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து அவர் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என, அம்மாநில எம்எல்ஏக்களிடம் கூறினார்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை எதிர்பார்த்திருக்கும் சச்சின் பைலட் தரப்புக்கு அசோக் கெலாட் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவருக்கு ஒரு பதவி என்பதை ராகுல் காந்தி வலியுறுத்தி வரும் நிலையில் அசோக் கெலாட் அதற்கு எதிராக பேசிவருவதால் தேர்தல் நடைபெற்றாலும் சர்ச்சைகள் ஓயாது என்பதை உணரமுடிகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அசோக் கெலாட் மட்டுமே தற்போது போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஆனால் சசி தரூர், திக் விஜய் சிங், மணிஷ் திவாரி ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த விவகாரத்தில் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது அசோக் கெலாட்டிடம் முதலமைச்சர் பதவியை கேட்டு நிர்பந்தித்தால் அவர் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் ஆகியோரின் பாதையை தேர்ந்தெடுப்பாரா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அல்லது தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் வெற்றி பெற்றுவிட்டால் எம்.பி ராகுல் காந்தியின் பேச்சை அவர் பொருட்படுத்த மாட்டார் என்றும் கூறுகின்றனர். வரும் நாள்களில் இந்த விவகாரம் எந்த பாதையை நோக்கி செல்கிறது என்பது தெரிந்துவிடும்.