2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதனையொட்டி கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்த நிலையில் அண்மையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்த பிறகு இன்று கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராக அறியப்படும் அசோக் கெலாட், தலைவர் தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ராகுல் காந்தி தனது குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவராக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு பலமுறை அவரை வலியுறுத்தியும் வேண்டாம் என்று ராகுல் காந்தி மறுத்துவிட்டார். நான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரானால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் முடிவு செய்வார். நாட்டின் தற்போதைய நிலையில் , எதிர்க்கட்சிகள் தான் வலுவாக இருக்க வேண்டும். விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்வேன்” என்று தெரிவித்தார் அசோக் கெலாட்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அசோக் கெலாட்டை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட ஒரு சிலர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் அசோக் கெலாட் வெற்றி பெற்றால் தன்னுடைய ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்தால் அந்த பதவியில் சச்சின் பயலாட்டுக்கு வழங்கவும் காங்கிரஸ் தலைமை தற்போது திட்டமிட்டு இருக்கிறது. இதனால் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவிவரும் உட்கட்சி பூசல் முடிவுக்கு வரும் என நினைக்கிறது காங்கிரஸ் தலைமை.
-விக்னேஷ் முத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM