சென்னை: நடிகை தீபா என்கிற பவுலின் கடந்த வாரம் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து கொண்டேன் என்றும் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும் அவர் எழுதி வைத்த தற்கொலை கடிதம் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
ஆனால், அதன் பின்னர் சிக்கிய சிசிடிவி வீடியோவால் இது தற்கொலையா? அல்லது கொலையா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இளம் நடிகை தற்கொலை
வாய்தா படத்தில் ஹீரோயினாக நடித்த இளம் நடிகை தீபா என்கிற பவுலின் ஜெஸிகா விருகம்பாக்கத்தில் உள்ள மல்லிகை அவென்யூவில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவில் தூக்கிட்டு தொங்கிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 29 வயதே ஆன இளம் நடிகை காதல் விவகாரம் காரணமாக இந்த சோக முடிவை எடுத்தார் என முதல் கட்ட விசாரணையில் கூறப்பட்டது.
காதலருடன் வாக்குவாதம்
நடிகை பவுலின் ஜெஸிகா தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அவருக்கும் அவரது காதலர் சிராஜுதின் என்பவருக்கும் இடையே வீட்டில் மிகப்பெரிய வாக்குவாதமே வெடித்ததாகவும், பவுலின் வீட்டில் இருந்து சிராஜுதின் அவசர அவசரமாக வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.
ஐபோன் மாயம்
பவுலின் ஜெஸிகா தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்தது அவருடைய நண்பர் பிரபாகரன் தான். அவர் தான் போலீஸாருக்கு நடிகை தீபா என்கிற பவுலின் ஜெஸிகா தற்கொலை செய்து கொண்டு இறந்த விஷயத்தை சொல்லி உள்ளார். போலீஸார் விசாரணையில் நடிகையின் ஐபோன் மாயமான விஷயம் தெரிய வந்த நிலையில், அது தொடர்பான விசாரணையில் இறங்கியவர்கள் தற்போது நடிகையின் ஐபோனை கண்டு பிடித்துள்ளனர்.
ஐ போன் கண்டுபிடிப்பு
பவுலின் தற்கொலை செய்து கொண்டபோது முதல் ஆளாக வந்து கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடமிருந்து தான் அந்த காணாமல் போன ஐ போன் மீட்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை பவுலின் பயன்படுத்திய மூன்று செல்போன்கள் ஒரு டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட ஐபோனில் தகவல்களோ அல்லது புகைப்படம் , வீடியோக்கள் எதுவும் டெலிட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக தடையவியல் துறையின் ஆய்வுக்கு உட்படுத்த அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
பிரபாகரனிடம் விசாரணை
காதலன் சிராஜுதீன் வாங்கி கொடுத்த ஐபோன் என்பதால் அதை தாம் எடுத்து வந்ததாக விசாரணையில் பிரபாகரன் தெரிவித்திருக்கிறார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சிராஜுதனிடம் பவுலின் வாக்குவாதம் செய்ததாகவும் அதனைத் தொடர்ந்து சிராஜுதீன் தம்மை உடனடியாக பவுலின் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார் பிரபாகரன். கிட்டத்தட்ட அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
காதலனிடம் விசாரணை
கைப்பற்றப்பட்டுள்ள மூன்று செல்போன்கள் மற்றும் டேப்களில் உள்ள விவரங்கள் குறித்தும், இதன் அடிப்படையில் காதலன் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கோயம்பேடு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பவுலின் தீபா தற்கொலை செய்து கொண்ட வீட்டிலிருந்து சில நகைகளும் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.