சில மாதங்களுக்கு முன்பு, விஜய் டிவி `நீயா? நானா?’நிகழ்ச்சியில் நவீன ஆரோக்கிய உணவு முறையைப் பின்பற்றுபவர்களும், அதற்கு எதிர்மறையான கண்ணோட்டத்தில் இருப்பவர்களும் காரசாரமாக உரையாடிய நிகழ்ச்சி, பேசுபொருளாக மாறியது. அதில், கிரீன் டீ மற்றும் நம் பாரம்பர்ய உணவுகளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் (Antioxidant) அளவு குறித்து மருத்துவர் ஒருவர் புள்ளி விவரங்களுடன் பேசியது, இணையத்தில் இப்போதும் பலராலும் பார்க்கப்படுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட் என்றால் என்ன? இதை நம் உணவுடனும், குறிப்பாகத் தேநீருடனும் ஏன் ஒப்பிட வேண்டும்? இதற்கான விளக்கம் அறிய, சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணனிடம் பேசினோம்.
“காற்று மாசுபாடு, பூச்சிக்கொல்லிகள், நச்சுப்பொருள்கள், முறையற்ற வாழ்வியல் முறை போன்ற பல்வேறு காரணங்களால் உடலில் ஆக்ஸிடேஷன் (Oxidation) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதாவது ஒரு பொருள் ஆக்ஸிஜன் அல்லது மற்றொரு ஆக்ஸிஜனேற்ற பொருளுடன் தொடர்பு கொள்ளும்போது நிகழக்கூடிய ரசாயன எதிர்வினை மாற்றம்தான் ஆக்ஸிடேஷன். இதைக் குறைக்க அல்லது கட்டுப்படுத்த, நாம் உட்கொள்ளும் உணவின் மூலம் உருவாகும் வேதிப்பொருள்தான் ஆன்டி ஆக்ஸிடன்ட். ஆரோக்கியமான உடல்நலனுக்கு இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பங்கு மிகவும் முக்கியமானது.
நம் அன்றாட உணவுகளிலேயே இது அதிக அளவில் இருக்கிறது. கிராம்பு, பட்டை, மஞ்சள், இஞ்சி, கறிவேப்பிலை, கறுப்பு மிளகு, முருங்கையிலை, வேப்பம்பூ உட்பட பாரம்பர்ய மருத்துவ குணம் நிறைந்த உணவுகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மிகுதியாக இருக்கிறது. பெரு நெல்லியில் கணிசமான அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், தினமும் அரை அல்லது ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.
பீட்சா, பர்கர், பப்ஸ், கேக் போன்ற பெரும்பாலான துரித உணவுகளிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் கிடையாது. இதுபோன்ற உணவுகளை அதிகம் சாப்பிட்டுவந்தால், ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட அவசியமான சத்துகள் போதிய அளவில் கிடைக்காமல் போவதுடன், உடல் பருமன் போன்ற தேவையில்லாத தொந்தரவுகள்தான் ஏற்படும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட் Vs டீ, கிரீன் டீ, காபி
தேநீர் மற்றும் கிரீன் டீ ஆகியவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவு எதில் அதிகமாக இருக்கிறது என்று விவாதம் செய்பவர்கள், தேநீர் குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தேநீரானது குளிர்பிரதேச நாடுகளில் அதிகம் பருகப்படும் பானம். ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகுதான், தேநீர் இந்தியாவில் பிரபலப்படுத்தப்பட்டது. கடந்த 30 – 40 ஆண்டுகளில்தான் எல்லா தரப்பு மக்களும் பருகும் பானமாகத் தேநீர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதற்கு முன்புவரை, சுக்கு, திப்பிலி, இஞ்சி, புதினா, துளசி, கறிவேப்பிலை போன்ற மருத்துவ குணம் நிறைய உணவுப் பொருள்களில்தான் பெரும்பாலானோர் பானம் தயாரித்துப் பருகினர்.
தேநீர், காபி குடிப்பதால் புத்துணர்ச்சியுடன், ஆன்டி ஆக்ஸிடன்ட் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால், நம் மூலிகை உணவுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பானத்தில்தான் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் கிடைக்கிறது. பால் மற்றும் சர்க்கரை இல்லாததால் கிரீன் டீ-யில் கலோரி அளவு மிக மிகக் குறைவாக இருக்கிறது. எனவே, தேநீர் குடிப்பதைவிட கிரீன் டீ குடிப்பது நல்லது.
எந்த ஊட்டச்சத்து பானமாக இருந்தாலும், தினமும் அதிகபட்சமாக 2 – 3 கப் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. தவறான உணவுப்பழக்கத்தினால், உணவின் மூலம் கிடைக்கும் இரும்புச்சத்து சரிவர கிடைக்காமல் போக தேநீரும் காபியும் காரணமாகலாம். இதனால், உணவு உட்கொள்ளும்போது டீ, காபி குடிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.