குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக போராடி வருகிறது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் நட்டா தெரிவித்தார்.
காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:
தமிழகம் புண்ணிய பூமி. பல விடுதலைப் போராட்ட தியாகிகளை தந்துள்ளது. அறிவு ஜீவிகள் நிறைந்த மண். தேசிய அரசியலில் தவிர்க்க முடியாததாக தமிழகம் உள்ளது.
இந்தியா பொருளாதாரத்தில் மட்டும் முன்னேறவில்லை. சமூகம் சார்ந்தும் முன்னேறியுள்ளது. தற்போது நரிக்குறவர்களை எஸ்.டி. பட்டியலில் சேர்த்து அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. நம் நாடு ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்தது. தற்போது ரூ.8,400 கோடிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
உலக பொருளாதாரம் வீழ்ச்சிஅடைந்தாலும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பாஜக கொள்கை அடிப்படையிலான கட்சி, அனைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சியாக உள்ளது.
மற்ற கட்சிகள் சுருங்கி மாநில கட்சிகளாக மாறிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குடும்ப அரசியல் உள்ளது. தமிழகத்தில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசைகட்டி வருகின்றனர். அந்த மாநிலங்களில் குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக போராடி வருகிறது.
நீட் தேர்வால் கிராம மக்கள் எளிதில் மருத்துவ படிப்பை பெறுகின்றனர். தேசிய கல்வி கொள்கை பற்றி எதுவும் தெரியாமல் பேசுகின்றனர். இதில் மருத்துவ படிப்பைக்கூட தமிழில் படிக் கலாம். இவ்வாறு அவர் பேசினார்.