இளம் பெண் ஒருவர் தனது 9 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் அப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கள்ளக்குறிச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பரமேஸ்வரி என்கிற பெண்ணுக்கும், அவரது கணவரான சுப்ரமணியன் என்பவருக்கும் குடும்பச் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் தனது மகள் கரிஷ்மா (9) என்பவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார் பரமேஸ்வரி. தற்கொலைக்கு முயன்ற பரமேஸ்வரி காப்பாற்றப்பட்ட நிலையில், மகள் உயிரிழந்திருக்கிறார்.
இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் சுப்பிரமணியன் கொடுத்தப் புகாரின்பேரில், கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சித்த பிரிவுகளின்கீழ் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்றவந்த நிலையில், முதன்மை குற்றவாளி மீதான இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி கீதாராணி தனது தீர்ப்பில் அரசுத் தரப்பில் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் பரமேஸ்வரி குற்றவாளி என்று உறுதி செய்து, கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ. 15,000/- ஆயிரம் ரூபாய் அபராதமும் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM