சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்திலுள்ள தேவ்பூர் கிராமத்தைச் சார்ந்தவர் சிவ்நாராயண் சத்நாமி (55). இவரின் மகன் கெலன்தாஸ். மருமகள் சங்கீதா. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் சத்நாமி தன் மகனையும் மருகளையும் தொடர்ந்து கேள்வி கேட்டு கேலி செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (20-9-22) ஏற்பட்ட தகராறில் சத்நாமி தொடர்ந்து தன் மருமகள் சங்கீதாவை கேலி செய்ததோடு, அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.. இதைத் தொடர்ந்து, சங்கீதா வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
எனினும் சத்நாமி அவரிடம் தொடர்ந்து அத்துமீறியுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த கெலன்தாஸ் வீட்டிலிருந்த மண்வெட்டியுடன் வெளியே வந்துள்ளார். தொடர்ந்து மண்வெட்டியால் தந்தையை தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்தோர் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததும், சம்பவ இடத்திற்கு காவலர் விரைந்து வந்து, கெலன்தாசை கைது செய்துள்ளனர். பின் சத்நாமியை மீட்டு நாக்ரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின் மேல்சிகிச்சைக்காக தம்தாரியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சத்நாமி உயிரிழந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில், “திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மகனையும் மருமகளையும் தந்தை தொடர்ந்து கேள்வி கேட்டு கேலி செய்து வந்ததால் தந்தையை, மகனே மண்வெட்டியால் அடித்து கொன்றிருக்கிறார்” எனத் தெரிய வந்திருக்கிறது.