உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையிலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது என்று காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா பேசியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு பேசினார். வரும் காலத்தில் தமிழ்நாட்டில் தாமரை ஆட்சிதான் மலரும் என்று அவர் கூறினார்.
மேலும் அவர், “தமிழ்நாடு ஒரு புண்ணிய பூமி. பல போராட்ப வீரர்களை தந்த நாடு தமிழ்நாடு, தமிழக கலாச்சாரம் புனிதமானது. விஞ்ஞானமும் கலையும் இங்கே கொட்டி கிடக்கிறது.
விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது. 2014 இல் 27 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது 1 இலட்சத்து .30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையிலும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி 14% விகிதம் உயர்ந்துள்ளது. நமது ஒட்டுமொத்த உற்பத்தி 31 இலட்சம் கோடியாகவும், பொருளாதாரம் வளர்ச்சி 13.5 % விகிதமாகவும் உயர்ந்துள்ளது.
சென்னை, ராமநாதபுரம், மதுரை உட்பட ஐந்து ரயில்வே நிலையங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது மட்டுமல்லாமல்,
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி கோடி, கோடியாக கொட்டி கொடுத்து வருகிறார். விவசாயம் மேம்பாட்டு திட்டத்தில் 12.46 இலட்சம் தமிழக விவசாயிகளுக்கு மாதம்தோறும் 6000 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. 14 இலட்சம் வீடுகளும், 55இலட்சம் கழிப்பறை கட்டிடங்களும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
1222 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருததுவமனை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கும், கட்டுமான துறைக்கும் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்திய பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமையை மத்திய அரசு கோவிட் காலத்தில் எடுத்த நடவடிக்கையை கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
217 கோடி டோஸ் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே போல் இரண்டரை கோடி தடுப்பூசி வெளிநாடுகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி கொள்கை அடிப்படையிலான கட்சி. பாஜக மட்டுமே தேசிய கட்சியாக இருந்து வருவகிறது. மற்ற கட்சிகள் சுருங்கி மாநில கட்சியாக மாறி வருகின்றன.
இப்பொழுது ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதனை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி போராட வேண்டி உள்ளது. ஹரியானா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களில் நடப்பது போல தமிழகத்திலும் திமுக குடும்ப ஆட்சி நடத்தி வருகிறது. கொள்ளை அடிப்பது, கட்டப்பஞ்சாயத்து என்றால் அது திமுக தான்.
தமிழ் இலக்கியம், கலாச்சாரம்,பாரம்பரியத்தை பாரதிய ஜனதா கட்சி மதிக்கும் கட்சியாக இருந்து வருகிறது. ஆனால் திமுகவிற்கு இதில் ஏதாவது பங்கு உண்டா? அக்கட்சி பிரிவினைவாதம் பற்றி பேசுகிறது.
நீட் மூலம் கிராம மக்களும் மருத்துவ கல்வி பெற முடிகிறது. மாற்றத்தை கொண்டு வரவே பாரதிய ஜனதா அரசியலில் இருந்து வருகிறது.
புதிய கல்விக் கொள்கையின் மூலம் உள்ளூர் மொழிகளிலே படிக்க முடியும். அதற்கு தான் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. இதன் அர்த்தம் ஸ்டாலினுக்கு புரியுமா? இதனால் அந்தந்த மொழிகளிலேயே மருத்துவம் படிக்க முடியும், இதுவே புதிய கல்விக் கொள்கை” என்று பேசினார்.