கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 18-ம் தேதி நடந்தது. அதில் முதல் பரிசான 25 கோடி ரூபாய் திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு கிடைத்தது. குலுக்கலுக்கு முந்தைய நாள் மாலையில் பழவங்காடி பகவதி லாட்டரி ஏஜென்சியிலிருந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு மறுநாளே 25 கோடி ரூபாய் கிடைத்தது அனூபை உற்சாக மிகுதியில் ஆழ்த்தியது. தனக்கு 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்ததை தன் மனைவி மாயாவிடம் முதலில் சொல்லியதாகவும். தன் மகன் சேமித்து வைத்த உண்டியலை உடைத்து அந்தப் பணத்தில் 500 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கியதாகவும் அனூப் தெரிவித்தார். ஆட்டோ ஓட்டிவந்த அனூப் வெளிநாட்டுக்குச் செல்வதற்காக கேரளா கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்தார். இந்த நிலையில், 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்ததால் லோன் வேண்டாம் என வங்கியில் கூறிவிட்டார். வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் திட்டத்துக்கும் முழுக்குபோட்டுவிட்டார்.
25 கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கும் அனூபுக்கு 10 சதவிகிதம் ஏஜென்ட் கமிஷன் மற்றும் 30 சதவிகிதம் வரி போக 15.75 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தப் பணத்தில் தொழில் செய்யப்போவதாக அனூப் கூறியிருந்தார். கடந்த ஆண்டுவரை ஓணம் பம்பர் பரிசுத்தொகை 12 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டுதான் 25 கோடி ரூபாயாக பரிசுத்தொகை உயர்த்தப்பட்டது. கேரள லாட்டரி வரலாற்றிலேயே அதிக தொகை பரிசாகப் பெற்றவர் என்ற நிலையில் அனூபை மீடியாக்கள் தொடர்ச்சியாக நேர்காணல் செய்தன. இந்த நிலையில், தன்னிடம் கடன் கேட்டு தினமும் வீட்டுக்கு நிறையபேர் வருவதால் தனக்கு நிம்மதி இல்லை என்றும், தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும் வீடியோ வெளியிட்டிருக்கிறார் அனூப்.
அனுப் வீடியோவில், “ஓணம் பம்பர் பரிசு கிடைத்தபோது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஆள்கூட்டமும், டி.வி கேமராக்களையும் கண்டபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இப்போது எனது சந்தோசம் எல்லாம் போய்விட்டது. என்னால் வெளியில் எந்த இடத்துக்கும் போக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உதவிக்கேட்டு தினமும் நிறையபேர் வருகிறார்கள். அதனால் என் சகோதரியின் வீட்டில் இப்போது இருக்கிறேன். என் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் இப்போது இங்கு வந்தேன். நான் வீடு மாறினாலும் அதைக் கண்டுபிடித்து அங்கு வந்துவிடுகிறார்கள். சொந்த வீட்டுக்கே வரமுடியவில்லை. கோடீஸ்வரனாக இருந்தாலும் சொந்தக் குழந்தையிடம் வரமுடியாத நிலையிலேயே இருக்கிறேன். இதை பார்க்கும்போது இவ்வளவு பணம் கிடைத்திருக்க வேண்டாம் என நினைக்கிறேன். மூன்றாம் பரிசு கிடைத்திருந்தால்கூட போதும் என்ற எண்ணம்தான் வருகிறது. ஏற்கெனவே எதிரிகள் அதிகம், இப்போது இன்னும் அதிகரித்துவிட்டார்கள்.
என் கையில் இன்னும் பணம் வந்துசேரவில்லை எனச்சொன்னாலும் நம்பாமல், ‘கொஞ்சமாவது பணம் எடுத்து தா’ எனக் கேட்கிறார்கள். தொலைக்காட்சிகளில் என்னைப் பார்த்தால் எங்கு போனாலும் அடையாளம் கண்டு பணம் கேட்கிறார்கள். மாஸ்க் வைத்துவிட்டுகூட வெளியில் போக முடியவில்லை. என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லக்கூட முடியவில்லை. நான் இப்போது வீடியோ பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டின் கேட்டை தட்டிக்கொண்டு ஆட்கள் நிற்கிறார்கள். பணம் இன்னும் கிடைக்கவில்லை, எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் இருக்கிறார்கள். பணம் கிடைத்தாலும் அதைவைத்து உடனடியாக நான் எதுவும் செய்யப்போவதில்லை. வரி குறித்து நிறைய விஷயங்கள் தெரிய வேண்டியது இருக்கிறது. எனவே இரண்டு வருடத்துக்கு பிறகே அந்தப் பணத்தை எடுத்து எதாவது செய்ய திட்டமிட்டுள்ளேன். உதவி செய்யும் எண்ணம் எனக்கும் உள்ளது. ஆனால், எனது நிலையை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்” எனக் கூறியிருக்கிறார் அனூப்.