கோவை : கோவை மாநகரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் எதிரொலியாக 3 பேர் கைது செய்யப்பட்டு நகரில் நான்கு கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளன. கோவையில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கோவை ஆத்துப்பாலம் அருகே கரும்பு கடை பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, எஸ்டிபிஐ மற்றும் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். . ஒப்பணக்கார வீதி, சாயிபாபா காலனி, குறிச்சி, குனியமுத்தூர் பகுதியிலும் முஸ்லிம் அமைப்பை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கோவை 100 அடி சாலையில் பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தனது கடை மீது கடந்த 3 ஆண்டுகளில் 3-வது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக அந்த கடையின் உரிமையாளர் பாஜக நிர்வாகி மோகன் தெரிவித்துள்ளார். இதேபோல கடந்த 2 தினங்களில் 3 வெவ்வேறு இடங்களில் கோவை நகரில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், முக்கிய இடங்களில் வாகன தணிக்கை நடக்கிறது. அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கோவை நகரில் நான்கு கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளது.