புதுடெல்லி: சுற்றுச்சூழலுடன் கூடிய வளர்ச்சியே இந்தியாவின் இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கான தேசிய மாநாட்டை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை: “புதிய இந்தியா புதிய சிந்தனையுடன்புதிய அணுகுமுறையை கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொண்டே, நாடு தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது.
நாட்டின் காடு பரப்பு அதிகரித்துள்ளது. ஈர நிலங்களின் பரப்பும் அதிகரித்துள்ளது. சிங்கம், புலி, யானை, சிறுத்தை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
நச்சு கழிவுகள் வெளிப்படாத நிலையை வரும் 2070-ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என்பதே இந்தியாவின் இலக்கு. இதற்கு மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல்களில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மை மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை ஆகியவற்றை திறம்பட நடைமுறைப்படுத்த இது அவசியம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த செயல்திட்டங்கள் நாட்டில் எங்கு பின்பற்றப்பட்டாலும் அதனை பிற மாநிலங்களும் பின்பற்ற முன்வர வேண்டும். உயிரி எரிபொருள் கொள்கையாக இருந்தாலும், பழைய வாகனங்களை கையாளும் கொள்கையாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த கொள்கைகளை பின்பற்றுவதில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்.
சுகாதாரத் துறை அமைச்சகம் என்பது கண்காணிப்புப் பணிகளை மட்டும் செய்வதற்கானது அல்ல. பிற அமைச்சகங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் வளர்ச்சியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழலுடன் கூடிய வளர்ச்சியே நாட்டின் தற்போதைய இலக்கு. சுற்றுச்சூழலுக்கு உகந்த வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும். இந்த இலக்குகளை எட்டுவதில் மாநிலங்களின் பங்களிப்பு மிகப் பெரியது” என்று அவர் பேசினார்.