செப்.25-ம் தேதி நீடாமங்கலத்தில் பனைத் திருவிழா: விழாவின் சிறப்பம்சங்கள் இதுதான்!

ஆயிரம் நபர்கள் ஒரே சயமத்தில் பனைவோலை காத்தாடி சுற்றும் சாதனை நிகழ்ச்சி, பனை உணவுப்பொருள்கள் மற்றும் பனைவோலை பொருள்கள் தயாரிப்பு போட்டி, கண்காட்சி உள்ளிட்ட இன்னும் பல சிறப்பான நிகழ்வுகளை உள்ளடக்கிய பனை திருவிழா… திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ராஜேஷ்வரி திருமண மஹாலில், 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை. காலை 9 மணி- மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பசுமை விகடன் மற்றும் கிரீன்நீடா சுற்றுலா அமைப்பு இணைந்து நடத்தும் இவ்விழாவில் ஏராளமான விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சினிமா மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பனை சார்ந்து இயங்கும் செயற்பாட்டளர்கள், இலக்கியவாதிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்கிறார்கள்.

பனை மரங்கள்

பனையை பற்றி இதுவரை நீங்கள் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம், பனையில் இத்தனை உணவுப்பொருள்களா என்ற தலைப்பில் தயாரிப்பு போட்டி, கண்காட்சி மற்றும் விற்பனை, பனைவோலையில் விதவிதமான கைவினைப்பொருள்கள் என்ற தலைப்பில் தயாரிப்பு போட்டி, கண்காட்சி மற்றும் விற்பனை ஆகியவை இவ்விழாவில் நடைபெறவுள்ளன.

ஒரு பனைமரத்தின் கவலை என்ற தலைப்பில் கவியரங்கம், நாட்டுப்புற பாடல்களின் இசை சங்கமம், மரங்கள் கண்காட்சி, தமிழர்களின் வீர விளையாட்டு ஆகியவையும் இவ்விழாவில் இடம்பெறவுள்ளன. மறந்துபோன நம் பாரம்பர்ய விளையாட்டுகள் என்ற தலைப்பில் பனங்காய் நுங்கு வண்டி, கார்த்திகை பூ சுற்றுதல், பனை ஓலைக் காத்தாடி, பல்லாங்குழி, ஒத்தையா ரெட்டையா, ஆபியம், கோலிக்குண்டு, கிட்டிப்புள், தாயம், பம்பரம், பரமபதம், ராஜா-ராணி, சில்லுக்கோடு, வளையல் விளையாட்டு, ஆடு புலி ஆட்டம் ஆகிய விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

இவ்விழாவுக்கு திருவாரூர் மாவட்ட கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன் தலைமை வகிக்கிறார். கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு வரவேற்கிறார். பனைத் திருவிழாவை தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் ஏ.நாராயணன் தொடங்கி வைக்கிறார்.

இவ்விழாவில்… சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், பனை செயற்பாட்டளர் காட்சன் சாமுவேல், வேளாண், வேளாண் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செ.நல்லசாமி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.சுந்தர்ராஜ்,

பனை திருவிழா

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திருவள்ளுவன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், திரைப்பட இயக்குநர் ஏ.சற்குணம், திருவாரூர் வேலுடையார் கல்விக் குழுமங்களின் தலைவர் தியாகபாரி, எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் தலைவர் செந்தூர் பாரி, காரைக்கால் பண்பலை வானொலி நிலைய இயக்குநர் வெங்கடேஸ்வரன், லயன்ஸ் மாவட்ட ஆளுநர் கு.மணிவண்ணன் உள்ளிட்ட இன்னும் பலர் உரையாற்றுகிறார்கள்.

இவ்விழாவில் திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ கே.மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ ராஜமாணிக்கம் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.