பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக டெல்லி சென்று சோனியாகாந்தியை சந்தித்து பேச உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் குறித்த முன் தயாரிப்புகளில் சத்தமில்லாமல் ஈடுபட்டு வருகின்றன.
இருமுறை தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. ஆனால் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து பாஜகவை எதிர்த்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை யார் முன்னெடுப்பது என்ற கேள்வி எழுந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் அந்த பணியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
சிறை தண்டனை, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த லாலு பிரசாத் யாதவ் தனது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், “நானும், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரும் விரைவில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியைச் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.நடைப் பயணத்தில் உள்ள ராகுல் காந்தியை அவரது பயணம் முடிந்த பிறகு சந்திக்க முடிவு செய்துள்ளோம்.
அடுத்த மக்களவைத் தோதலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இதற்காக தேசிய அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது அவசியம். அதனை மையமாகக் கொண்டதாக எனது சந்திப்புகள் இருக்கும்.
நாட்டில் மதவாதத்தையும், பிரிவினையையும் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைவதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. அவா்களிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றாா்.