புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, டெல்லியில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோதுமை பயிரிடப்பட்டு ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் நெல் விதைக்கப்பட்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
அறுவடைக்குப் பிறகு வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் ஏப்ரல், மே மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண் கழிவுகளை எரிப்பதை தடுக்க குறிப்பிட்ட மாநில அரசுகளுக்கு நடப்பாண்டில் ரூ.600 கோடி நிதி, 2 லட்சம் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. டெல்லி காற்று மாசு பிரச்சினை குறித்து கிராமங்கள்தோறும் விவசாயிகளிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நடப்பாண்டில் வேளாண் கழிவுகள் அறவே எரிக்கப்படக்கூடாது. இதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.