தமிழக பேருந்துகள் தமிழக கேரள எல்லையில் நிறுத்தம்: கேரளாவில் தொடரும் பதற்றம்

கேரளாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் தமிழக பேருந்துகள் தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகம் கேரள உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தை பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வழக்கம்போல் கடைகள் செயல்படவும் பேருந்துகள் இயக்கவும் ஆணை பிறப்பித்து இருந்தது. 

இதனையடுத்து இன்று காலை முதல் வழக்கம் போல் கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாகனங்கள் போலீசார் பாதுகாப்புடன் இயங்கி வந்தன. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்தும் கேரளாவுக்கு தமிழக அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வந்தன. 

முன்னதாக, நாடு முழுவதும் நேற்று அதிகாலை முதல் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு பல தரப்பினர் கடுமையான விமர்சனங்களையும் தெரிவித்தனர். இதை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.ஃபைசி கடுமையாக சாடினார். 

தேசத்தின் வளர்ச்சியில் முழுமையாக தோற்றுப்போய்விட்ட பாசிச ஆட்சி, ஆட்சியில் தங்களின் தோல்வியை மறைக்க நாட்டின் நிழல் எதிரியை உருவாக்குகிறது என்று எஸ்.டி.பி.ஐ தலைவர் குற்றம் சாட்டினார். 

எனினும், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று திரும்பிய தமிழக அரசு பேருந்தின் மீது பாலராமபுரம் பகுதியில் வைத்து பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் கல் எறிந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் இந்த பேருந்து பலத்த சேதமடைந்தது. 

இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்பட்டு வந்த அனைத்து தமிழக அரசு பேருந்துகளும் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து தமிழக பேருந்துகளில் கேரளா செல்ல வந்த பயணிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அதே நேரத்தில் கேரள அரசு பேருந்துகள் அனைத்தும் வழக்கம்போல் குமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.